Skip to main content

“மிரட்டுகின்றனர்” - படக்குழு மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு 

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
payal rajput rakshana movie issue

சின்னத்திரையில் பிரபலமாகி பஞ்சாபி, இந்தி, தெலுங்கு என அடுத்தடுத்த மொழிகளில் அறிமுகமானவர் நடிகை பாயல் ராஜ்புத். தமிழில் 2021ஆம் ஆண்டு வெளியான இருவர் உள்ளம் படத்தில் வினய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்போது ரக்‌ஷனா என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துமுடித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளரால் தான் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, “நான் நடித்துள்ள ரக்‌ஷனா படம் 2019ஆம் ஆண்டு படமாக்கப்பட்டது. பின்பு 2020ல் 5 டபள்யூ.எஸ் (5ws) எனத் தலைப்பு வைக்கப்பட்டது. இப்படம் வெளியாவதில் தற்போது தாமதமாகி வருகிறது. அதனால் படக்குழு என்னுடைய சம்பளத்தை இன்னும் கொடுக்காமல் இருக்கின்றனர். மேலும் என்னுடைய சமீபத்திய வெற்றியை வைத்து பலனடைய பார்க்கிறார்கள். என்னை புரொமோஷனுக்கு வரவழைக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு என்னுடைய டீம், அடுத்தடுத்த கமிட்மெண்டுகளால் புரொமோஷனில் கலந்து கொள்ள முடியாது எனச் சொன்ன பிறகும், தெலுங்கு சினிமாவிலிருந்து என்னைத் தடைசெய்து விடுவதாக மிரட்டுகின்றனர். 

என்னுடைய டீம் ரக்ஷனா பட டிஜிட்டல் விளம்பரத்திற்காக பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்த போது, முதலில் இழப்பீட்டுடன் நிலுவைத் தொகையை செலுத்த பரிந்துரைத்தது. ஆனால், அவர்கள் சமரசம் செய்து கொள்ள மறுத்துவிட்டனர். என் பெயரைக் கெடுக்கும் வகையில் என் பெயரைப் பயன்படுத்தியுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. சமீபத்திய சந்திப்புகளில், அவர்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள். விநியோகஸ்தரிடம் சில சொத்துக்களைக் காட்டும்படி கேட்டனர். அப்படி காட்டவில்லை என்றால், என்னுடைய படத்தை வெளியிட மாட்டோம் எனக் கூறினர். என்னுடைய சம்பளபாக்கியை திருப்பித் தராமலும் என்னுடைய ஒப்புதல் இல்லாமலும் படத்தை வெளியிட முயற்சித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார். மேலும் இதற்கு நீதி வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்