Skip to main content

 “ராகுல் காந்தியால் ஆக முடியுமா? ஏன் சிரிக்கிறீர்கள்..” - அமித்ஷா விமர்சனம்

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
Amitshah criticized rahul gandhi

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நான்கு கட்டமாக 381 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்டமாக வாக்குப்பதிவு இன்று (20-05-24) மாலை நடந்து முடிந்தது.

இதனையடுத்து, மொத்தம் 10 மக்களவைத் தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் ஆறாம் கட்டமாக மே 25ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்த வகையில், இன்று (20-05-24) பா.ஜ.க சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “சமாதான அரசியலுக்காக, காங்கிரஸ் 370வது பிரிவை ரத்து செய்யவில்லை. நீங்கள் அனைவரும் நரேந்திர மோடியை இரண்டாவது முறையாக பிரதமராக்கினீர்கள். ஆகஸ்ட் 5, 2019 அன்று அவர் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கினார். இப்போது காஷ்மீரில் நமது மூவர்ணக் கொடி பெருமையுடன் பறக்கிறது” எனப் பேசினார். 

அதனைத் தொடர்ந்து அமித்ஷா அங்குள்ள கூட்டத்தைப் பார்த்து, “சொல்லுங்கள், காஷ்மீர் நம்முடையதா இல்லையா? சத்தமாகச் சொல்லுங்கள், உங்கள் குரல் கார்கேவை எட்ட வேண்டும். கார்கே உங்களுக்கு 80 வயது ஆகிறது. ஆனால் உங்களுக்கு நாட்டைப் பற்றி புரியவில்லை. ஹரியானா இளைஞர்கள் காஷ்மீருக்காக உயிரைக் கொடுக்க முடியும்” எனக் கூறினார். மேலும் அவர், “இந்த கர்னல் தேசத்திலிருந்து ராகுல் காந்தியிடம் நான் சொல்ல விரும்புகிறேன், காதுகளைத் திறந்து கேளுங்கள். இது பா.ஜ.க அரசாங்கம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தமானது. எங்களுடையதாக இருக்கும், அதை நாங்கள் திரும்பப் பெறுவோம்.

காங்கிரஸ் தலைமை, குறிப்பாக கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் தங்கள் சிறுபான்மை வாக்கு வங்கியைப் பற்றி பயந்து 500 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் ஏழைகளைப் பற்றி மட்டுமே பேசினார்கள். ஆனால், ஏழைகளுக்கு எதுவும் செய்யவில்லை. ஏதேனும் பெயர் உள்ளதா? சரத் பவார் பிரதமராக முடியுமா, மம்தா பானர்ஜி ஆக முடியுமா, ஸ்டாலின் ஆக முடியுமா, அரவிந்த் கெஜ்ரிவால் ஆக முடியுமா, உத்தவ் தாக்கரே ஆக முடியுமா? ராகுல் காந்தி ஆக முடியுமா? ஏன் சிரிக்கிறீர்கள், அவர் காங்கிரஸின் பெரிய தலைவர். அவர்களால் பிரதமராக முடியுமா?. இவர்களுக்கு எந்தத் தலைவனும் இல்லை, கொள்கையும் இல்லை. சுழற்சி அடிப்படையில் ஐந்து வெவ்வேறு பிரதமர்கள் இருப்பார்கள் என்று இந்தியா கூட்டணி கூறியுள்ளது. 

ஆனால், இது மளிகைக் கடையல்ல, 130 கோடி மக்கள் வாழும் நாடு என்பது ராகுல் காந்திக்கு புரியவில்லை. பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறக்கூடிய, கோவிட் போன்ற தொற்றுநோய்களின் போது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய, பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வந்து நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய, வலிமையான பிரதமர் இந்தியாவுக்குத் தேவை. மோடியால் மட்டுமே நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், தன்னிறைவு, வளம், தொழில்நுட்பம் போன்றவற்றை மேம்படுத்தவும் முடியும் என்பது அனைவரும் அறிந்ததே” என்று கூறினார்.  

சார்ந்த செய்திகள்