Skip to main content

சித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு

Published on 18/10/2018 | Edited on 18/10/2018


 

chithannavasal lingam



தமிழ்நாட்டில் குடவறையில் சிவலிங்கம் உள்ள இடங்கள் இரண்டு உள்ளது. அந்த இரண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல், மற்றொன்று நார்த்தாமலை. நார்த்தாமலையில் சுனையில் உள்ள குடவறை சிவலிங்கம் கடைசியாக 1876 ம் ஆண்டு புதுக்கோட்டை மன்னரின் மனைவி சுனை நீரை இறைத்து வழிபட்டதாக கல்வெட்டு உள்ளது. அதன் பிறகு யாரும் நார்த்தாமலை குடவறை சிவலிங்கத்தை பார்த்து வழிட்டதாக பதிவுகள் இல்லை. சுனை நீர் நிறைந்தே காணப்படுகிறது. 
 

அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் இருவேறு மலையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த குகை ஓவியம், சமணர் படுக்கைகள் உள்ளன. இவ்விரண்டு மலைகளுக்கும் இடையே உள்ள மலையில் உள்ள சுனை நாவல் சுனை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாவல் சுனை சுமார் 10 அடி ஆழம் கொண்டது. இதன் அடியில் ஒரு பக்கத்தில் குடவறையிலேயே சிவலிங்கம் உள்ளது. இந்த குடவறையும் அதில் மலையையே குடைந்து சிவலிங்கம் வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கும் வரலாற்று ஆய்வாளர்கள் இது பல்லவர்கள் அல்லது முத்தரையர் மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். 

 

chithannavasal lingam


 

      நாவல் சுனையிலும் எப்போதும் தண்ணீர் இருப்பதால் இந்த சிவலிங்கம் மூழ்கியே இருக்கும். இந்நிலையில் சித்தன்னவாசல் கிராமத்தினர் வழக்கமாக நடவு பணிகள் முடிந்த நிலையில் மழை வேண்டி சுனையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி முற்றிலுமாக சுத்தம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். அப்படி வழிபாடு நடத்தினால் மழை பெய்யும் அந்த ஆண்டு விளைச்சலும் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. 
 

    அதன்படி சில நாட்களுக்கு முன்பு நடவுப் பணிகள் முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுனையில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி சிவலிங்கத்தை வழிபட முடிவு செய்து அதற்கான பணிகளில் கிராமத்து இளைஞர்களும், யாதும் ஊரே யாவரும் கேளிர் அமைப்பினரும் ஈடுபட்டனர். செவ்வாய் கிழமை தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு அதில் தேங்கி இருந்த சேறும் சகதிகளையும் சுத்தம் செய்தனர். அதன் பிறகு ஆள் உயரத்தில் வட்டவடிவ சிவலிங்கம் வெளிப்பட்டது. 

 

chithannavasal lingam


 

      சிவலிங்கம் வெளிப்பட்ட சிறிது நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் முடிந்து அடுத்த சிறிது நேரத்தில் மழை பெய்து சிவலிங்கம் மறைந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிவலிங்கத்தை ஏராளமானோர் தரிசித்தனர். திரண்டு வந்த சிவபக்தர்கள் சிவபுராணம் பாடினர்.
 

 இது குறித்து யாதும் ஊரே  யாவரும் கேளிர் எனும் அமைப்பின் செயலாளர் எடிசன், எங்கள் அமைப்பின் சார்பில் மரபு நடை பயணம் மேற்கொண்டோம். அதில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சுனையில் சிவலிங்கம் மூழ்கி இருப்பதை அறிந்து கிராமத்தினருடன் சுனையில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு சிவலிங்கத்தை பார்த்தோம். சிறப்பு பூஜை நடைபெற்றது என்றார்.
 

பூசாரி சின்னத்தம்பி, கடந்த 1992-க்குப் பிறகு தற்போதுதான் சுனையில் இருந்து முழுவதுமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடந்த இரு நாட்களாக இந்தப் பணி நடைபெற்றது. சுமார் 15 நிமிடம் மட்டும் பக்தர்கள் சிவலிங்கத்தை வழிபட்டனர். அதன்பிறகு மழை பெய்து படிப்படியாக சிவலிங்கம் மறைந்துவிட்டது. தண்ணீர் மூழ்கியே இருப்பதுதான் இதன் சிறப்பாகும். இதன் பிறகு மழை பொழியும். விவசாயம் சிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
 

     ஆய்வாளர் முத்தழகன் கூறும்போது, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்காண வரலாற்று சுவடுகள் மறைந்து கிடக்கிறது. அப்படி ஒன்று தான் இந்த நாவல்சுனை சிவலிங்கம். குடவறை ஓவியம் அமைந்துள்ள மலையின் உச்சியில் இந்த நாவல் சுனை உள்ளது. எப்பவும் தண்ணீர் வற்றாத சுனை இது. இதில் தான் சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கிராம மக்கள் சுனை நீரை இறைத்து வழிபாடு நடத்தி உள்ளனர். பிறகு இப்போது சிவலிங்கத்தை வெளிக்காட்டி உள்ளனர். அந்த குடவறையில் கல்வெட்டுகள் ஏதும் மறைந்துள்ளதா என்று ஆய்வுகள் செய்த பிறகே அதன் காலமும், சொல்ல முடியும் என்றார். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்