Skip to main content

விடுமுறை நாளில் ஆர்.டி.ஓ ஆஃபீஸ் லஞ்சத்தில் பிசியோ பிசி! - ரூ.25 லட்சம் ரொக்கமும் 117 பவுன் நகைகளும் விருதுநகரில் பறிமுதல்!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

 

 

போக்குவரத்துத் துறை, காலம் காலமாக லஞ்சத்தில் திளைத்தபடியே உள்ளது. 24 வருடங்களுக்கு முன்பே, 'இந்தியன்' திரைப்படத்தில், இத்துறையில் மலிந்து கிடக்கும் லஞ்ச அதிகாரிகளைத் தோலுரித்திருந்தார் இயக்குநர் ஷங்கர். அதனாலெல்லாம், அதிகாரிகள் திருந்திவிடுவார்களா என்ன? சரி, விஷயத்துக்கு வருவோம்!

 

லஞ்சத்தை தவிர்ப்பதற்கு, இத்துறையில் ஆன்லைன் பணப் பரிவரித்தனை மேற்கொள்ளப்படுவதாகச் சொன்னாலும், புரோக்கர்கள் நடமாட்டமும், லஞ்சத் தொகை பரிமாற்றமும், வாடிக்கையாகிவிட்டது. இன்றைக்கு இரண்டாவது சனிக்கிழமை என்பதால், விருதுநகர் ஆர்.டி.ஓ. (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்) ஆஃபீசுக்கும் இன்று அரசு விடுமுறைதான்! ஆனாலும், அந்த அலுவலகம் படு பிசியாக இருந்தது. புரோக்கர் அதுல் பிரசாத் என்பவர் மூலம், விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி, மதுரை மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் ஆகியோர் பெற்ற லஞ்சப்பணம், அந்த அலுவலகத்தில் பெருவாரியாக உள்ளதென்று தகவல் கிடைத்தவுடன், விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையினர், விருதுநகர் ஆர்.டி.ஓ அலுவலகம் விரைந்தனர்.  

 

காரில் இருந்தே நகைகளும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் அளித்துள்ளனர். அந்த வகையில், விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வியிடமிருந்து 117 சவரன் தங்க நகைகளும், ரொக்கம் ரூ.24,15,780-ம், மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்திடமிருந்து ரூ.1,43,250-ம், புரோக்கர் அதுல் பிரசாத்திடமிருந்து ரூ.7,850-ம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நகைகள் அனைத்தும், தனது சொந்த நகைகள் என்று கலைச்செல்வி கூறிவரும் நிலையில், அதற்கான ஆதாரத்தை அவரால் தரமுடியவில்லையாம். மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த், விடுமுறை நாளில் விருதுநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு எதற்காக வந்தார் என்பதற்கும், அத்துறையினரிடம் பதில் இல்லை.

 

வருடத்தின் கடைசி மாதம் என்பதால், லஞ்சத் தொகையைப் பிரிப்பது குறித்த  ‘டிஸ்கஷன்’ நடந்திருக்கலாம் என்றும், ‘போக்குவரத்துத்துறை அமைச்சகம் வரைக்கும் மாமூல் போய்க்கொண்டுதான் இருக்கிறது’ எனவும், தகவலைக் கசியவிடுகிறது போக்குவரத்துத்துறை வட்டாரம். 

 

 

 

சார்ந்த செய்திகள்