Skip to main content

“மோடி நடித்து அழலாம், நான் அழமாட்டேன்” - பிரதமரை எதிர்த்த காமெடியன்

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
Comedian Nomination filed rejected who opposed the Prime Minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 13ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இறுதிக் கட்டமாக ஜூன் 1 இல் வாக்குப்பதிவு நடக்கிறது. அந்த வகையில், வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வாரணாசி ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதே வேளையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடப் போவதாக பிரபல நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான ஷ்யாம் ரங்கீலா (28) அறிவித்து தனது வேட்புமனுவை கடைசி நாளான நேற்று முன்தினம் (14-05-24) தாக்கல் செய்தார். 

பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை போல் மிமிக்ரி, செய்து பலரது கவனத்தை பெற்ற இவர், பிரதமர் மோடியை எதிர்த்து பல விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனையடுத்து, அவரது நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்குவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறிய போது, “சூரத், இந்தூர் தொகுதிகள் போல் எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் இல்லாமல், பிரதமர் மோடி வெற்றி பெற்றுவிடக்கூடாது. 2014ஆம் ஆண்டில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசி வந்தேன். ஆனால், 10 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதனால் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட உள்ளேன்” என்று கூறியிருந்தார். அதன்படி, ஷ்யாம் ரங்கீலா கடந்த 14ஆம் தேதி பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர், அவர் வெற்றிகரமாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்தார். 

Comedian Nomination filed rejected who opposed the Prime Minister

இந்த நிலையில், நேற்று (15-05-24) வாரணாசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அதில், தனது வேட்புமனு நிராகரிப்பட்டதாக ஷ்யாம் ரங்கீலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஷ்யாம் ரங்கீலா, “இன்று, எனது ஆவணங்களில் சில சிக்கல் இருப்பதாகவும், நான் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் என்னிடம் கூறினார். என்னுடன் வழக்கறிஞர்களை உள்ளே செல்ல விடாமல் என்னை தனியாக அழைத்தார்கள். என் நண்பர் தாக்கப்பட்டார். மோடி வேண்டுமானால் நடித்து அழலாம். ஆனால் நான் இங்கு அழ விரும்பவில்லை. மொத்தமே நேற்று 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இன்று 32 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தை பார்த்து சிரிக்க வேண்டும் என எண்ணுகிறேன். சிரிக்க வேண்டுமா? அல்லது நான் அழ வேண்டுமா?” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்