Skip to main content

பிரதமருக்கு ஆதரவாகப் பேசிய ராகுல் காந்தி?; போலி வீடியோவை அம்பலப்படுத்திய காங்கிரஸ்!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
Congress exposed fake video of BJP!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 13ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பேசியதாக பா.ஜ.க.வினர் ஒரு வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வந்தனர். பா.ஜ.க.வினர் வெளியிட்ட அந்த வீடியோவில், ‘நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக நீடிப்பார். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன், ஜூன் 4, 2024 அன்று நரேந்திர மோடி பிரதமராக இருப்பார். நீங்கள் அதை எழுத்துப்பூர்வமாக எடுத்துக் கொள்ளலாம். நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகலாம். உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் எஸ்பி இணைந்து போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது’ என்று கூறியதாக இருந்தது. இது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இது தொடர்பாக விளக்கம் அளித்த காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வினர் பரப்பி வந்த வீடியோ, எடிட் செய்யப்பட்ட வீடியோ என்றும், ராகுல் காந்தி அந்த பொதுக்கூட்டத்தில் உண்மையாக பேசியதையும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். அதில் ராகுல் காந்தி பேசியதாவது, ‘ஆரம்பத்தில் உண்மையைச் சொல்கிறேன். இதை இந்திய ஊடகங்கள் ஒருபோதும் சொல்லாது. ஆனால் இதுதான் உண்மை. ஜூன் 4, 2024 அன்று நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருக்க மாட்டார். இதை எழுத்துப்பூர்வமாக எடுத்துக் கொள்ளுங்கள். நரேந்திர மோடி ஜி இந்தியாவின் பிரதமராக முடியாது. நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். கடுமையாக உழைக்கிறோம். இப்போது பார்க்கிறீர்கள், உத்தரப் பிரதேசத்தில் எங்கள் கூட்டணிக்கு 50க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்’ என்று கூறியிருந்தார்.

இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, “பொய்களின் தொழிற்சாலை பா.ஜ.க எவ்வளவுதான் ஆறுதல் சொன்னாலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. மீண்டும் சொல்கிறேன். ஜூன் 4க்குப் பிறகு நரேந்திர மோடி பிரதமராக முடியாது. இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் புயல் வீசுகிறது” என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்