தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பல்வேறு நகரங்களில் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளை கடுமையான வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் பசுமை கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்திலேயே அதிகளவு வெப்பம் பதிவாகும் கரூர் மாவட்டதில் 108 டிகிரி மற்றும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கி 1 வாரமான நிலையில், கரூர், திருச்சி நெடுஞ்சாலை சுங்ககேட் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் கரூர் செல்லும் சாலையில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்காக கரூர் மாவட்ட பொதுப் பணித்துறை சார்பில் தகரத்திலான மேற்கூரை கடந்த இரு நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதனால் கடும் வெயிலில் இச்சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
இதேபோல், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா, கோவை சாலையில் உள்ள சிக்னல்களிலும் பசுமை கூரை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கரூர் மாநகராட்சி சார்பில் இன்று பேருந்து நிலையம் ரவுண்டானா சிக்னல் பகுதியில் மேற்கூரை நிழல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.