Skip to main content

விளையாட்டைப் பார்க்க சவூதி பெண்களுக்கு அனுமதி!

Published on 02/11/2017 | Edited on 03/11/2017
 ஸ்டேடியத்திற்குள் பெண்களுக்கு அனுமதி! 

சவுதியின்  கட்டுப்பாடுகளும் மனமாற்றமும்...    





கடந்த வாரம் ஒரு செய்தியைப் பார்த்ததும் பலருக்கும் ஆச்சரியமாக இருந்திருக்கும்.  ஆம், 'சவுதி அரேபிய அரசு அந்நாட்டுப்    பெண்களை 2018லிருந்து மூன்று முக்கிய இடங்களிலுள்ள  (ஜடா, டாமம், ரியாத்)  விளையாட்டு அரங்குகளுக்குள் பார்வையாளர்களாக  அனுமதிக்க உள்ளது'  என்ற செய்திதான் அது. 

சவுதி மன்னர் முகமது பின் சல்மான்,  2030க்குள் பழமையிலிருந்து  மீட்கும்  சீர்திருத்தங்களை நிகழ்த்த வேண்டும்   என்றும், இஸ்லாம்,  பெண்களை மிகவும்  கட்டுப்படுத்துகிறது என்றும், நவீன இஸ்லாமே நமது நாட்டை நவீனமாக்க  கடவுச்சாவி' என்றும் கூறியுள்ளார். இதற்காக விஷன் 2030  (vision 2030) என்ற திட்டத்தையும்  வகுத்துள்ளார். இதன் முன்னோட்டமாக கடந்த செப்டம்பரில்   தேசிய நாளன்று   மைதானத்திற்குள்  பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.   2030ல் பெண்களின் வேலைவாய்ப்பும்   உயரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  





அரபு   நாடுகளிலுள்ள பெண்களுக்குக்  கட்டுப்பாடுகள் சற்று அதிகம்.  உள்நாட்டில்  பயணிக்ககூட ஆண்களின் (தந்தை, கணவர்,  சகோதரர்) அனுமதியைப்  பெறவேண்டும் என்ற  சட்டமே இதற்கு சாட்சி. இதுமட்டுமல்லாமல் திருமணம், விவாகரத்து செய்துகொள்ள,  படிக்க,  வேலைக்கு செல்ல, வங்கி கணக்கு தொடங்க, சில அறுவை சிகிச்சைகள் செய்துகொள்ள, கல்வி  பயில, பயிற்றுவிக்க, பாலியல்  ரீதியான சட்டங்கள் என பலவும் இருந்தன. இவற்றுள் சில  சட்டங்கள், சில ஆண்டுகளுக்கு முன்தான் ரத்து செய்யப்பட்டன.  



2008ல் பெண்கள் தாங்கள் வேலைக்கு செல்ல ஆண்களிடம் அனுமதி பெறவேண்டும் என்ற சட்டம்  ரத்து செய்யப்பட்டது. 2013ல்  முதன்முதலாக பெண்களுக்கு மிதிவண்டி ஓட்ட அனுமதி  வழங்கப்பட்டது. அதேயாண்டில் தனியார் பள்ளிகளில் பயிலும் பெண்கள்  விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2017 அக்டோபர் வரை பெண்கள்  கார் ஓட்ட  அனுமதியில்லை, தற்போதுதான் அதற்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு  வருகின்றன. ஜூன் 2018க்குள் அதற்கான தடை நீக்கப்பட  வாய்ப்புள்ளது.  







உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சவுதியில், பெண்களை கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு  மதக் கட்டுப்பாடுகளும், பல  நூற்றாண்டுப்   பழக்க வழக்கங்களுமே  காரணம். என்றாலும் உலக  அளவில் அனைத்து முன்னேற்றங்களிலும் பெண்களின் பங்கு உயர்ந்துகொண்டே  வரும்பொழுது, சவுதியும் மாறத் தயாராகி இருப்பது மிக நல்ல மாற்றமே.  இதை முன்னெடுத்த  மன்னர் பாராட்டப்பட வேண்டியவரே. நம் நாட்டிலும் பல்வேறு மதங்களிலும்  நவீன சங்கிலிகள், அச்சுறுத்தல்கள், கட்டுப்பாடுகள்  இன்றும்   இருக்கின்றன.  தனி மனித ஒழுக்கமும்,  சுயமரியாதையுமே இவ்வித கட்டுப்பாடுகளை உடைக்கும் சம்மட்டிகளாக இருக்கும்.  

கமல்குமார் 

சார்ந்த செய்திகள்