Skip to main content

‘யூடியூபர் இர்பான் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?’ - தமிழக அரசு விளக்கம்!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
TN govt explanation about What is the action taken in the case of YouTuber Irfan

பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைத் துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து சமீபத்தில் கண்டறிந்துள்ளார். இதனையடுத்து தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவரது யூடியூப் சேனலில் அறிவித்திருந்தார். அந்த வீடியோவை சுமார் 20 லட்சம் பேர் பார்த்திருந்தனர். இத்தகைய சூழலில் தான் குழந்தையின் பாலினத்தைப் பகிரங்கமாக அறிவித்த இர்ஃபானுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த இர்பான் மீது சுகாதாரத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

அதே சமயம் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து வெளியில் சொல்பவர்கள் மீது தமிழகத்தில் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என்ற நிலையில் இர்பானுக்கு மேலும் சிக்கல் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் இர்பான் விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளது. அதில், “யூடியூபர் இர்பான் துபாய் சென்ற போது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைப் பெண் என்று ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டுள்ளார். அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றின் போது அங்கு குழுமியிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வினை ஒளிப்படமாக எடுத்து கடந்த 19 ஆம் தேதி (19.05.2024) அன்று தனது யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டுள்ளார். அதனை பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர். 

TN govt explanation about What is the action taken in the case of YouTuber Irfan

இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) இன் படி தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயலால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மூலம் இர்பானுக்கு நேற்று (21.05.2024) அன்று பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காகக் குறிப்பானைச் சார்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இர்பான் மூலம் இது தொடர்பாக வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோவினை சமூக வலைத்தளங்களிலிருந்து உடனடியாக நீக்கிட யூடியூப் தளத்திற்கும், கணினி குற்றம் (Cyber Crime)பிரிவிற்கும் மே 21 ஆம் தேதி  (21.05.2024) நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் ஸ்கேன் சென்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Additional special buses run!

பௌர்ணமி, மற்றும்  வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பௌர்ணமி நாளான இன்று (21/06/2024), சனிக்கிழமை (22/06/2024) மற்றும் ஞாயிறு (23/06/2024)  ஆகிய வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (21/06/2024) 600 பேருந்துகளும், நாளை (22/06/2024) 410 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பேருந்துகளும், நாளை 80 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Additional special buses run!

அதே சமயம் பெங்களூர். திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று 15 பேருந்துகளும், நாளை 15 பேருந்துகளும் ஆக 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பௌர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 30 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Additional special buses run!

அதோடு ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதம்!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Debate on grant requests today

2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனையடுத்து பொது நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன. அச்சமயத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காரணமாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படாமல், பிப்ரவரி 22ஆம் தேதியுடன், தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் ஜூன் 20 ஆம் தேதி தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் நேற்று (20.06.2024) கூடியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, “துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். கள்ளச்சாராய விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாகத் தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனே சிகிச்சை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார். 

Debate on grant requests today

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (21.06.2024) காலை இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை) (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை), மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகிய துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின், எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவினர் மற்றும் அதிகாரிகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தற்போதைய நிலவரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் குழுவினர் எடுத்துக் கூற உள்ளனர். அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவான பதிலளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.