Skip to main content

ரஜினி வரமாட்டார்... கமலை வரவிடமாட்டார்கள்...

Published on 06/11/2017 | Edited on 06/11/2017



கமல் கிளப்பியிருக்கும் மற்றொரு விவாதத் தலைப்பு, இந்து தீவிரவாதம். இதனால் அவர்மீது பா.ஜ.க. காட்டிய பாய்ச்சலில் முதல்கட்டமாக உ.பி.யில் வழக்கு பதிவாகியுள்ளது.. எண்ணூர் நேரடி விசிட்டில் தொடங்கி, பிறந்தநாள் ஏற்பாடுகள் வரை கமலின் ஒவ்வொரு அசைவும் புதிய அரசியல் கட்சிக்கான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன் ரஜினி என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வியும் தொடர்கிறது. ரஜினி-கமல் அரசியல் வருகை பற்றிய எதிர்ப்பைத் தாண்டி, தமிழக-இந்திய அரசியல் பற்றிய தன் பார்வையை மறைக்காமல்-குழப்பாமல் வெளிப்படுத்துகிறார் கமல் அண்ணன் சாருஹாசன்.

நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் வெல்ல முடியாது என்று எப்படி சொல்கிறீர்கள்?

தமிழ்நாட்டைத் தவிர வேறெங்கும் சினிமா பைத்தியம் என்பது கிடையாது. சினிமா பைத்தியம் என்ற படமே எடுக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். கன்னடத்தில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகர் ராஜ்குமார். அவரை குறைவாக பேசினால் கன்னட மக்கள் அடிக்க வருவார்கள். அவரை எதிர்த்து நடித்துக்கொண்டிருந்த விஷ்ணுவரதனே சென்னையில்தான் தங்கியிருந்தார். அப்படிபட்ட ராஜ்குமார் அரசியலுக்கு வர மறுத்துவிட்டார். இந்தி உட்பட எந்த மொழி நடிகரும் இங்குள்ளது போல் அரசியலில் பெயர் பெறவில்லை.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நடிகர்களாக இருந்தபோதும் மக்கள் செல்வாக்கை பெற முடிந்ததே?

தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டதால்தானே எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கினார். ஜெயலலிதா அரசியலில் வென்றுவிடக் கூடாது என்று தி.மு.க. முயற்சியெடுத்து வழக்கு போடவில்லையென்றால், ஜெயலலிதா தன் போயஸ் தோட்டத்தைவிட்டுக் கூட வெளியே வந்திருக்கமாட்டார்.



அப்படியென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைவர்களாக உருவானதற்கு தி.மு.க.தான் காரணமா?

தி.மு.க. மேற்கொண்ட முயற்சிகள்தான் காரணம். ஒருவரை ஒழித்துக்கட்ட நினைத்தால், அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். இரக்கப்படுவதுதான் மனித சுபாவம். அதுதான் அரசியலில் ஓட்டாக மாறுகிறது. அப்படித்தான், ஜெயலலிதா தி.மு.க.வால் கட்டாயப்படுத்தி அரசியலுக்கு வரவழைக்கப்பட்டவர் என்பது என் கருத்து.

தண்டனை இரக்காமாக மாறும் என்றால், தவறு செய்தவர்களை தண்டிப்பது எப்படி?

தண்டனை என்பதை பழிக்குப் பழி என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அப்படி அல்ல... அதிகமான தண்டனை பெற்றவர் மீது இரக்கம் ஏற்படுகிறது. காவல்துறை கடமையைச் செய்தாலும், திருடன்மீது இரக்கப்படுவது தான் யதார்த்தமாக இருக்கிறது. 100கோடி அபராதம் என்ன ஆனது? அது மக்களுக்கு சென்று சேரவேண்டிய பணம் தானே. அரசுக்கு அந்த பணம் வந்ததா? எப்போது வரும்? ஜெயலலிதா இல்லை என்றால் என்ன.. அவர் சொத்தை விற்று வசூல் செய்யுங்கள். வசூல் செய்யவில்லை என்பதையாவது சொல்லுங்கள். அதைச் செய்யாமல் சிறையில் வைப்பது தேவையில்லாதது. சசிகலாவை தண்டிப்பதாக நினைத்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக, இன்று சின்னம்மாவின் ஆட்சி நடக்கிறது என்று அமைச்சர்கள் சொல்கிற நிலை வந்திருக்கிறது. ஆங்கிலத்தில் இதை counter productive என்பார்கள். இதைத் தான் கலைஞர் அன்றே‘நோவுக்கும் சாவுக்கும் வாக்களிப்பவர்கள், இவர்களை என்ன செய்யமுடியும்?’ என்றார்.

‘திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தை சீரழித்துவிட்டன’ என்று பா.ஜ.க.வினர் தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கிறார்களே?

நான் ஒப்புக்கொள்ள மாடேன். இந்திய மாநிலங்களிலேயே முன்னிலை வகிப்பது தமிழ்நாடு. பெரிய வளங்கள் இல்லாவிட்டாலும், காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், அதற்குப் பின்வந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி காலத்திலும் ஆளுமை மிக்க மாநிலமாக இருந்து வந்திருக்கிறது தமிழ்நாடு. இந்திய மக்களை ஏமாற்றிய கட்சி பா.ஜ.க. இன்னும் மக்கள் ஏமாந்துகொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க. என்பது மதம்சார்ந்த அரசியல் கட்சி. சாதியோடு சேர்த்து மதத்தையும் ஒழிக்கவேண்டும்.



முற்போக்காளராக இருக்கும்போது உங்கள் சமூகத்தில் எதிர்ப்புகள் வந்திருக்குமே?

நான் சார்ந்த சாதிக்காரர்கள் என்னை ஒதுக்கிவைக்கிறார்கள் என்றால், அதுபற்றி எனக்கு கவலையில்லை. எப்போதுமே மனிதர்களுக்கு அறிவாளிகளைக் கண்டால் கோபம் வரும். முட்டாள்களை வணங்குவார்கள். பார்ப்பனர்களும் இஸ்லாமியர்களும் பெண்களை வீட்டில் அடைத்து வைப்பவர்கள். பார்ப்பனியத்தை நெருங்கிய சாதிகளிலும் அது இருக்கும். தலித் குடும்பங்களில் அது இல்லை. திருமணங்களில் தாலி கட்டும் முறை ஒழிய வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு விடுதலை வரும்.

தாலி என்பது கணவன்-மனைவி உறவு தொடர்பான சென்டிமெண்ட் இல்லையா?

இஸ்லாமியர்கள் தாலி கட்டுவது இல்லை. ஆனால், கணவர் மீது மனைவிக்கு இதே செண்டிமெண்ட் அங்கேயும் இருக்கிறதே... அதுதான் இல்லறம். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் தமிழகத்தில் சாத்தியமில்லையா?

அர்ச்சகர் என்பது ஒரு வேலையா? நாம் தலித்துகளை கலெக்டராகவும், டாக்டராகவும், இன்ஜினியராகவும் ஆக்குகிறோம். அதை விட்டுவிட்டு கோயிலில் மணி அடிக்கச் சொல்லி கேட்பது தேவையா? இது வேடிக்கையாக இருக்கிறது. நான் அதை ஒரு அந்தஸ்தாக நினைக்கவில்லை. இல்லாத கடவுளிடம் கேட்கவேண்டிய கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்.



உயிரோடு இருப்பவர்களுக்கு பதாகைகள் வைக்கக்கூடாது என்ற தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

செத்தவர்களுக்கு வைக்கலாம் என்றால் பா.ஜ.க.வினர் தெருவுக்குத் தெரு “கோட்சே”வுக்கு கட்-அவுட் வைப்பார்கள். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகளுக்கு கட்-அவட் வைத்து நாட்டுமக்களை முட்டாள்கள் ஆக்கிவிடுவார்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கட்-அவுட் வைக்க ஒரு தமிழர் கூட்டமே காத்திருக்கிறது.

தமிழர்தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்ற கருத்து எழுகிறதே?

தமிழ் ஒரு மொழி. தமிழ் மட்டுமே உணர்வு என்று நினைக்கவேண்டாம். பிறக்கும்போதே தமிழ் பேசிப் பிறந்தவன் நான். என் தாய்மொழி தமிழ்தான். ஆனால், மொழிக்காக உயிரை என்னால் கொடுக்கமுடியாது. இப்போது ஆட்சி செய்கிறவர் தமிழர்தானே. இது தேவையில்லாத விவாதம்.

கமல் எண்ணூர் சென்று மக்களை சந்தித்தது அரசியலுக்கு வருவதற்கான முதல்படியா?

கமல் கொசஸ்தலை ஆற்றை பார்வையிட்டது செய்தியாக வரும். அன்புமணி பார்வையிட்டது செயல்பாடாக மாறும். நடிகர்கள் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு நடிக்க வருவதில்லை. தனக்கு ஒரு புகழை சம்பாதிக்கவே நடிக்க வருகிறார்கள். அரசியலுக்கு வர சினிமாவை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.



ரஜினி, கமலுக்கு இடையில் ‘அரசியலுக்கு யார் முதலில் வருவது’ என்ற போட்டி நடக்கிறதே?

ரஜினியும் கமலுமும் இணைந்து அரசியல் செய்தால் கூட 10 சதவிகிததுக்கு மேலாக ஓட்டு கிடைக்காது. ரஜினி நல்ல மனிதர். ஆனால்,  மக்கள் பிரச்சனைகளில் அவர் கருத்து சொல்லியதுண்டா? கமல் அரசியல் ஆலோனைகள் நடத்திய அளவுக்குக் கூட ரஜினி நடத்தவில்லை. ரஜினி வரமாட்டார், கமலை வரவிட மாட்டார்கள் என்பது என் கணிப்பு.

சந்திப்பு: ஃபெலிக்ஸ் இன்பஒளி
படங்கள் - ஸ்ரீபாலாஜி

சார்ந்த செய்திகள்