Action taken against the school teacher who threatened the government hospital

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரத்தில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனை மீது வெடிகுண்டு வீசப்படும் என்றும் மருத்துவமனைக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்றும் சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட தடவை, அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பேசினார். இந்தப்போன்கால் மீது சந்தேகம் வந்ததால், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார், அரசு மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை நடத்தினர்.

Advertisment

அந்த சோதனையில், எந்தவித வெடிகுண்டும் இல்லை, அது புரளி என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, எண் 100க்கு போன் செய்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில், செல்போன் முகவரி சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த கேசவன் (50) என்பதும், அவரது சொந்த ஊர் அரக்கோணம் அடுத்த குன்னத்தூர் கிராமம் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றுவது தெரியவந்தது.

Advertisment

அதனைத்தொடர்ந்து கேசவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கேசவன் தனது நண்பரான தட்சிணாமூர்த்தி என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். கடன் பணத்தை தட்சிணாமூர்த்தி கேட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்க தட்சிணாமூர்த்தியும் உடந்தையாக இருந்தார் என்று போலீஸிடம் கேசவன் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் தட்சிணாமூர்த்தியைக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கேசவன் சொன்னது உண்மையா? என்பதையும் கடன் கேட்டதற்காக அவரை மாட்டிவிடுகிறாரா? என விசாரித்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, கேசவன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று டி.எஸ்.பி வெங்கடேசன் தெரிவித்தார். மேலும் கேசவனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.