Skip to main content

குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?

Published on 16/01/2018 | Edited on 16/01/2018
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா? 

சமீப நாட்களாக ஆடிட்டர் குருமூர்த்தி பல்வேறு அரசியல் கணக்குகளை போட்டபடி இருக்கிறார். ஆனால், அந்தக் கணக்கை தினமணி உள்ளிட்ட சில பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ஆயிரத்துச் சொச்சம் வாக்குகள் மட்டுமே வாங்கிய நிலையில், அதைப் பேச வக்கில்லாமல், எடப்பாடிக்கும் ஓபிஎஸ்சுக்கும் ஆண்மையில்லை, ஆற்றலில்லை என்று சொல்லி திசைதிருப்பினார்.

அதன்பிறகு, ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தவுடன் ரஜினியின் அரசியல் வரவை 60 லட்சம் புதிய வாக்காளர்கள் எதிர்பார்ப்பதாக கூறினார். பாஜகவுடன் இணைந்து செயல்படும்போது ரஜினி எளிதில் வெற்றிபெறுவார் என்று புதிய கணக்கைப் போட்டார்.

இப்படித்தான் புதிய வாக்காளர்களை நம்பி களத்தில் இறங்கிய மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் படுதோல்வி அடைந்தன. அந்தக் கட்சிகள் தங்களுடைய வழக்கமான வாக்கு வங்கியையே தொலைத்துவிட்டன என்பதுதான் உண்மை. இதைக்கூட உணராமல் ரஜினிக்கு கொம்பு சீவும் வேலையை ஆரம்பித்தார் குருமூர்த்தி.

இப்போது புதுசாய் ஒரு கணக்கை சொல்லியிருக்கிறார். அதாவது, அதிமுவுக்கும் திமுகவுக்கும் இளைஞர்கள் வருவதில்லையாம். அவர்கள் ரஜினிக்காக காத்திருக்கிறார்களாம். அதுமட்டுமில்லை, இன்றைய இளைஞர்கள் ஆன்மிகத்தைத்தான் விரும்புகிறார்களாம். அரசியலை விரும்பவில்லையாம்.



இப்படி சொல்கிற குருமூர்த்தி, இன்றைய இளைஞர்களுக்கு ஆன்மிக அரசியலை ரஜினி புரிய வைக்க வேண்டும் என்கிறார். ஆன்மிகத்தைத்தான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள் என்றால், அவர்களுக்கு ஆன்மிகத்தை ஏன் விளக்க வேண்டும்?

அதாவது, கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆன்மிகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழக இளைஞர்களை மறக்கடித்து விட்டதாகவும் கூறுகிறார்.

ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு துக்ளக் பத்திரிகை உறுதுணையாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். அதாவது, துக்ளக் பத்திரிகைக்கு பைனான்சியல் இன்வெஸ்ட்மெண்ட் வேண்டும் என்று மறைமுகமாக கேட்டிருக்கிறார்  குருமூர்த்தி. சோ இருக்கும்போதே துக்ளக்கை படிக்க வாசகர்கள் இல்லாமல் போனார்கள். இப்போ குருமூர்த்தி அந்த பத்திரிகையை நடத்த பாஜகவிடமும் ரஜினியிடமும் மறைமுகமாக நிதி கேட்கிறாரோ என்று துக்ளக் வாசகர் ஒருவர் சந்தேகம் எழுப்பினார்.

துக்ளக் பத்திரிகையை நடத்துவதற்காக அதற்காக ரஜினியின் அரசியல் முயற்சியையே தோற்கடிக்கும் வேலையில் ஏன் இறங்க வேண்டும் என்று விவரமறிந்த பத்திரிகையாளர்கள் சிலர் கேட்கிறார்கள்.

பாஜகவை தமிழ்நாட்டில் எல்லாக் கட்சிகளும் ஒதுக்கியுள்ள நிலையில் அந்தக் கட்சிக்காக  கூட்டணிக்கு ஆள்பிடிக்கும் வேலையில் குருமூர்த்தி ஈடுபட்டிருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதில் எது உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்.

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்