ADVERTISEMENT

குடியுரிமை சட்டத்திருத்தத்தில் குழப்பும் எடப்பாடி! 'இந்த' கேள்வியை கேட்காத ஸ்டாலின்!  

07:06 PM Jan 10, 2020 | kalaimohan

"தமிழகத்தில் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய ‘குடிமக்கள்’ பதிவேடுக்கான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தேசிய ‘மக்கள்தொகை’ பதிவேட்டிற்கான கணக்கெடுப்புதான் நடத்தப்பட இருக்கிறது. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்தான் மக்களை குழப்பி சூழ்ச்சி செய்கிறார்" என்று குற்றஞ்சாட்டுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. "என்.பி.ஆரும் என்.ஆர்.சி.யும் ஒன்றுதானே? அப்படியென்றால், மக்களைக் குழப்பி சூழ்ச்சி செய்வது நீங்கள்தானே?" என்று முதல்வர் எடப்பாடியைப் பார்த்து, எதிர்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் ஏன் கேள்வி எழுப்பவில்லை? என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்களும்!

ADVERTISEMENT


ADVERTISEMENT

இரண்டும் எப்படி ஒன்று?


என்.பி.ஆர். என்பது (National Population Register) தேசிய மக்கள் தொகை பதிவேடு. என்.ஆர்.சி. என்பது (National Register of Citizens) தேசிய குடிமக்கள் பதிவேடு. என்.பி.ஆர் எனப்படும் மக்கள் தொகை பதிவேடு என்பது குடியுரிமை சட்டத்தின் கீழ்தான் வருகிறது. மீசை இருந்தா சந்திரன், மீசை இல்லைன்னா இந்திரன் என்று ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினி ஏமாற்றுவதுபோல, என்.பி.ஆரும் என்.ஆர்.சியும் வேறு வேறு என்று சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன மத்திய மாநில அரசுகள். ஆக, என்.பி.ஆரும் என்.ஆர்.சி.யும் ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொண்டால்தான் சி.ஏ.ஏ. (Citizenship Amendment Act 2019) எனப்படும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஏன் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.


மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமீபத்திய பேட்டியில், ‘சென்சஸ் எனப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலுள்ள தனிநபர் விபரங்களை எங்களால் பார்க்கமுடியாது; எடுக்கமுடியாது. எங்களுக்கு மக்களுக்கான திட்டங்களை உருவாக்குவதற்கு விவரங்கள் தேவைப்படுகின்றன. மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை நேரடியாக பயனாளிகளுக்கு கொண்டுபோய் சேர்க்கவும் என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தேவைப்படுகிறது. அதனால்தான், என்.பி.ஆரை நடைமுறைப்படுத்துகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார். மேலும், இதை நியாயப்படுத்த ‘2010 ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு நடந்ததே… அப்போது ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?’ என்றும் பா.ஜ.க. தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.

உதாரணத்துக்கு, நம்ப கிராமத்துல ஒரு பள்ளிக்கூடம் கட்டி அந்த மக்களுக்கு ஒரு நல்வாழ்வுத்திட்டத்தை அமல்படுத்தப்போறோம்னு வெச்சுக்குவோம். இதுக்கு, என்ன விவரங்கள் தேவை?
அதாவது, எத்தனை ஆண்குழந்தைகள், எத்தனை பெண் குழந்தைகள் இந்த கிராமத்தில் இருக்கிறார்கள்? எந்தெந்த வயதில் இருக்கிறார்கள்? என்ற வயது மற்றும் பாலின புள்ளிவிவரங்கள் இருந்தால் போதும்தானே? குழந்தைகளின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தேவையா? அது, குழந்தை பள்ளியில் சேரும்போது தெரிந்துவிடும். அப்போ, நமக்கு தேவை புள்ளிவிவரம். அதாவது, ஒரு நல்வாழ்வுத்திட்டத்தை அமல்படுத்த அரசாங்கத்திற்கு தேவை தனிநபர் விவரங்கள் இல்லை. புள்ளிவிவரங்கள் மற்றும் அட்டவணைதான். இந்த, புள்ளிவிவரங்கள் அனைத்தையும் இத்தனை வருடங்களாக சென்சஸ் சட்டம் 1948-ன் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு கொடுத்துவருகிறது.


சென்சஸ் எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்குமுள்ள வேறுபாடு என்ன?

உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் பெயர் என்ன? வயது? பிறந்த தேதி? பிறந்த இடம்? உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்? அப்பா, அம்மா பெயர் என்ன? என்ன படிச்சிருக்கீங்க? என்ன மொழி பேசுறீங்க? பட்டியல் இனமா? பழங்குடியினரா? உள்ளிட்ட விவரங்கள்தான் சென்சஸ் எனப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் விசாரிக்கப்படும்.
மேலும், சென்சஸ் 1948 சட்டத்தின்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை யாராலும் பார்வையிட முடியாது. இன்னும் சொல்லப்போனால் நீதிமன்றத்தால்கூட பார்வையிடமுடியாது. இந்த, விவரங்களை சாட்சியாகவும் எடுத்துக்கொள்ள இயலாது. அதாவது, நம்மிடம் எடுக்கப்பட்ட தனிநபர் விவரங்களை யாராலும் பார்வையிட முடியாது என்ற உத்தரவாதத்தை சென்சஸ் சட்டம் நமக்கு அளித்திருக்கிறது. அதன், காரணமாகத்தான் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் சென்சஸுக்கு மக்கள் நம்பிக்கையோடு தங்களது முழு விவரத்தையும் தந்து சென்சஸ் வெற்றிகரமாக நடத்திமுடிக்க தங்களது முழு ஒத்துழைப்பையும் தருகிறார்கள். அதாவது, சென்சஸ் சட்டத்தின்கீழ் சென்சஸுக்காக கோரப்படும் தனிநபர் விவரங்கள் வெளியிடப்படமாட்டாது என்ற முழு நம்பிக்கையில் பொதுமக்கள் தங்கள் விவரங்களை தருகிறார்கள்.


ஆக, தனிநபர் விவரங்கள் தவிர்த்து வெறும் புள்ளிவிவரங்கள் மட்டும் அரசாங்கத்துக்கு போகிறது. பொதுவெளியிலும் புள்ளிவிவரங்கள் மட்டுமே இருக்கும். அந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அரசு, மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை உருவாக்கிக்கொள்கிறது.

இந்நிலையில்தான் ரேஷன் கடை, கேஸ் மானியம், விவசாயிகளுக்கான மானியம் என்று அரசு வழங்கும் நல்வாழ்வுத்திட்டங்கள் யாருக்குப்போய் சேர்கிறது? சரியான பயனாளிக்கு போய் சேர்கிறதா? ஏழை மக்கள் பயன் அடைகிறார்களா? என்பதை எல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் தனிநபர் விவரம் தெரிந்தால்தானே சரியாக கொண்டுபோய் சேர்க்கமுடியும்? என்று கேட்கிறது மத்திய அரசு.

ஆதார் இருக்க என்.பி.ஆர் எதற்கு?

இதற்கான, வேலையைத்தான் ‘ஆதார்’ கார்டு செய்துவருகிறது. 2016-ல் ஆதார் என்பது ஒரு சட்ட ரீதியாக உருவாக்கப்பட்ட அமைப்பு. இதற்கு, UIDAI (Unique Identification Authority of India) என்று பெயர். அதன் வலைதளத்தில், 125 கோடி இந்திய மக்களுக்கு ஆதார் அட்டை கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல், அவ்வப்போது அப்டேட்டும் செய்துகொள்ளலாம். அதாவது, ஒருவர் வேறு முகவரிக்கு சென்றுவிட்டால், பெயர் மாற்றிவிட்டால், பிறந்ததேதி இப்படி தனிப்பட்ட விவரங்கள் எதுவாக இருந்தாலும் ஆதாரில் மாற்றிக்கொள்ளமுடியும். அந்த, அடிப்படையில் மக்கள் பலகோடி தடவை மாற்றங்கள்/திருத்தங்கள் செய்திருக்கிறார்கள். அதேபோல், குழந்தை பள்ளித்தேர்வு எழுத ஆதார் வேண்டும் என ஆரம்பித்து வங்கி, கேஸ், சிம்கார்டு, ஃபைனான்ஸ், அட்ரஸ் ப்ரூஃப் ஏ டூ செட் எல்லாவற்றிற்குமே ஆதார் அட்டை ஆதாரமாக பெறப்படுகிறது. இப்படி, பல காரணங்களுக்கு பலகோடி பேரின் ஆதார் அட்டை வெரிஃபிகேஷனுக்காக பயன்பட்டுவருகிறது.


ஆதார் மூலம் ஒவ்வொரு மானியமும் செல்வதால் ஊழலற்ற நிர்வாகம், இடைத்தரகர்களுக்கு வேலையில்லை, நேரடியாக பயனாளிகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. வெளிப்படைத்தன்மையும் உள்ளது. அதாவது, Transparent and corruption free Administration என்று சொல்லிக்கொள்கிறார்கள். மேலும், தற்போது ஆதாரை பான் கார்டோடு இணைக்கவேண்டும் என்றும் சொல்லிவிட்டார்கள். எல்லா வகையிலும் ஆதாரை பயன்படுத்த வைத்துவிட்டது அரசாங்கம். ஆதாரே, யுனிக் ஐ.டி.தானே? அப்படியென்றால், நல்வாழ்வுத்திட்டங்களை கொண்டு செல்ல ஆதார் போதாதா?

தேவையான புள்ளிவிவரங்களை சென்சஸ் மூலம் தெரிந்துகொள்ளமுடியும். நல்வாழ்வுத்திட்டங்களை பயனாளிக்கு கொண்டுபோய் சேர்க்க ஆதார் அட்டை பயன்பட்டுவிட்டது. அப்படியென்றால், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சொல்லும் காரணத்துக்கான விவரங்கள் ஏற்கனவே சென்சஸ் மூலமும் ஆதார் மூலமும் இருக்கும்போது 2020-21 ஆம் ஆண்டில் என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு எதற்கு?

2010-ல் என்.பி.ஆர். எடுக்கபப்ட்டபோது எதிர்க்காமல் இப்போது எதிர்ப்பது ஏன்? என்று கேட்கிறார்கள்.
அரசின் மீது நம்பிக்கை இருக்கும்போது சந்தேகம் வரவில்லை. தற்போது, அரசின் சில நடவடிக்கைகளின் காரணமாக சந்தேகம் வருகிறது. மேலும், 2010 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது நமது பெயர்? பிறப்பிடம்? அம்மா பெயர்? அப்பா பெயர்? உள்ளிட்டவைதான் கேட்கப்பட்டது. ஆனால், 2020 தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் நமது அப்பாவோட பிறப்பிடம்? அம்மாவோட பிறப்பிடம் கேட்டால் அரசின் மீது சந்தேகம் எழாமல் இருக்குமா? சரி, அப்பா-அம்மா இருவரும் இருக்கிறார்கள் என்றால் அவர்களது அப்பா-அம்மாவின் பிறப்பிடம் குறித்து அவர்களிடம் கேட்டால் எப்படி சொல்லமுடியும்? ஒவ்வொரு மனிதனும் அவருடைய பிறப்பிடம் மட்டுமில்லாமல் அவரது அம்மா, அப்பா பிறப்பிடம், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைச் சொல்லவேண்டும். இது, இல்லாமல் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட சில ஆவணங்களையும் கேட்கிறார்கள்.

“நமக்கான திட்டத்தை உருவாக்கத்தான் நம்மிடம் விவரங்கள் கேட்கிறார்கள் என்றால், நம்மை அடையாளப்படுத்த அப்பா-அம்மா பெயர் கேட்பதிலும் நாம் பிறந்த இடத்தை கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. நம், அப்பா-அம்மா பிறந்த இடத்தை நம்மிடம் கேட்கவேண்டிய அவசியம் என்ன? இதில்தான், 2020 தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) சந்தேகம் எழுகிறது” என்கிறார் மேற்கண்ட விவரங்களை சுட்டிக்காட்டிப் பேசும் பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நம்மிடம்,


“தேசிய மக்கள் தொகை பதிவேடு விண்ணப்பத்தின் கடைசியில் ரிமார்க்ஸ் என்ற குறிப்பு உள்ளது. அந்த, குறிப்பில் என்ன எழுதப்படும்? நம்முடைய அப்பாவின் பிறப்பிடம் குறித்து சொல்லத்தெரியவில்லை என்றாலோ, அதற்கான சான்று கொடுக்கமுடியவில்லை என்றாலோ ‘ரிமார்க்ஸ்’ என்ற இடத்தில் ‘டவுட்ஃபுல்’ அதாவது சந்தேகம் என்று எழுதப்படுமா இல்லையா? அப்படி, டவுட்ஃபுல் என்று எழுதிவிட்டால் அதனுடைய விளைவு என்னவாக இருக்கும்?

2010-ல் ஆதார் இல்லை. அப்போது, நல்வாழ்வு திட்டங்களுக்காக விவரங்கள் சேகரிக்கப்பட்டதாக நாம் நினைத்துக்கொண்டோம். ஆனால், தற்போது நமது அனைத்து விவரங்களையும் கொண்ட ஆதார் உள்ளது. 2015-ல் ஆதார் அப்டேட் செய்யப்பட்டுவிட்டது. எனவே, ஆதார் மூலம் தனித் தனியாக நேரடியாக பயனாளிகளுக்கு திட்டங்களைக் கொண்டுசேர்ப்பது நடைமுறையில் உள்ளது. அப்படியென்றால், பத்துவருடங்களுக்கு ஒருமுறை எடுக்கும் சென்சஸ் எனப்படும் மக்கள்தொகை ’கணக்கெடுப்பை’ 2021 ஆம் ஆண்டு நடத்தவேண்டிய மத்திய அரசு, தேசிய மக்கள்தொகை ’பதிவேடு’ எடுக்கவேண்டிய அவசியம் என்ன? என்பதுதான் எங்களது கேள்வி.


அதாவது, யார் யாருடைய பெயருக்கு பக்கத்தில் டவுட்ஃபுல் என்று எழுதப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் மட்டும்தான், என்.ஆர்.சி.க்கான விவரங்கள் கேட்கவருவார்கள். இதனை, முதலமைச்சர் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்? என்.பி.ஆரை தமிழக முதல்வர் முடித்துக்கொடுத்துவிட்டால் என்.ஆர்.சிக்கு மாநில அரசிடம் மத்திய அரசு வரவேண்டிய அவசியமே இல்லை. என்.பி.ஆரிலுள்ள விவரங்களை வைத்தே என்.ஆர்.சியை உருவாக்கிக்கொள்ளலாம். என்.பி.ஆரில் இல்லாத விவரங்களையும் ஆவணங்களையும் என்.ஆர்.சியில் கேட்கும்போது கொடுக்கவில்லை என்றால் அவர் இந்தநாட்டின் சிட்டிசன் அதாவது குடிமக்கள் அல்ல என்று முடிவு செய்து டிடென்ஷன் சென்டரில் அதாவது முகாமிற்கு கொண்டுபோய் வைக்கப்படுவார்களா இல்லையா? அந்த, அச்சம் வரும்போதுதான் குடிமக்கள் திருத்தச்சட்டம்-2019 பதட்டத்தை உருவாக்குகிறது.

ஏனென்றால், பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிதானிலிருந்து வந்த மக்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும். ஆனால், முஸ்லீம் மதத்தினர், ஈழத்தமிழகர்கள், மதம்சாராத நாத்திகர்கள் விண்ணப்பிக்கமுடியாது. இரண்டு தலைமுறையாக மூன்று தலைமுறையாக தங்கியிருப்பவர்கள் எங்கே போவார்கள்? என்.பி.ஆர்., என்.ஆர்.சி., சி.ஏ.ஏ மூன்றும் சேர்ந்தால் மக்கள் மத்தியில் தேவையில்லாத பதட்டத்தை உண்டாக்குகிறது. இந்திய அரசியலைப்புச் சட்டம் சமத்துவக் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது. சமய சார்பற்ற ஜனநாயக குடியரசு என்கிற விழுமியங்களை தாங்கி நிற்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினுடைய நோக்கத்திற்கும் அதன் பிரிவுகளுக்கும் குறிப்பாக சட்டப்பிரிவு-14 ற்கும் நேர்விரோதமாக குடிமக்கள் திருத்தச்சட்டம்-2019
(சி.ஏ.ஏ-Citizenship Ammendment Act) அமைந்துள்ளது.


நாங்கள், தேசிய அளவில் குடிமக்கள் பதிவேட்டை பற்றி இன்னும் யோசிக்கவே இல்லை என்று பிரதமர் முதல் தமிழக முதலமைச்சர்வரை சொல்லுவது உண்மை என்றால் குடிமக்கள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் விதிகளின் அடிப்படையில் எடுக்கப்படும் என்.பி.ஆர் எதற்கு? என்றுதான் கேட்கிறோம்.

மக்கள் நல்வாழ்வு திட்டங்களை தீட்டவும் உருவாக்கவும் தேவையான புள்ளி விவரங்களை சென்சஸ் கொடுக்கிறது. நல்வாழ்வு திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க, ஆதார் இருக்கிறது. அப்படியென்றால், பத்தாண்டுக்கு ஒருமுறை எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே 2021-ல் எடுக்கவேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லாமல் தமிழக முதலமைச்சர் மழுப்பவேண்டிய காரணம் என்ன? இந்தக்கேள்வியை சட்டமன்றத்தில் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் எழுப்பவேண்டுமல்லவா? இதையெல்லாம், கேள்வி எழுப்பாமல் எப்படி தீர்வு காண்பது?” என்று விளக்குகிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

நேர்மையாக மக்களிடம் சென்சஸ் சட்டத்தின்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துங்கள். தேதிய மக்கள் தொகைப் பதிவேடு எனச்சொல்லி விவரங்களை சேகரித்து தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான வேலையை செய்தால், மக்களை ஏமாற்றுவதாகத்தான் பொருள் கொள்ளப்படும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT