Skip to main content

மத்திய மந்திரிசபையில் அதிமுகவா? தனியரசு அதிரடி பதில்!!!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

 

மத்திய மந்திரிசபையில் அதிமுக இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தனியரசு.
 

''இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுக ஆட்சி பெரும்பாண்மை பலத்துடன் நீடிக்கிறது. எதிர்க்கட்சியான திமுக, பேரவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்திருக்கிறது. ஆகையால் பெரும்பாண்மையுடன் இருந்தாலும் எந்த நேரத்திலும் ஆட்சிக்கு ஆபத்து உள்ளது என்ற உணர்வோடுதான் இந்த ஆட்சியை நகர்த்த முடியும். 


  Thaniyarasu


 

தினகரனின் அமமுக பாராளுமன்றத் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில் அதிமுக - அமமுக இணையுமா? அமமுகவை அழைப்பதில் என்ன தயக்கம் என்ற கேள்வி எழுகிறது. தலைமையை யார் ஏற்பது என்பதுதான் இரு தரப்பும் இணைவதில் சிக்கல். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வந்த சிக்கலே அதுதான். கட்சிக்கு யார்? ஆட்சிக்கு யார் என்பதுதான் டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆகியோருக்கு உள்ள முரண்பாடு. இந்த முரண்பாடுகளை களைந்து இவர்கள் பயணிக்க தொடங்கினால் அதிமுக வலுவாகும். ஆனால் அதற்கான சூழல் இதுவரைக்கும் வரவில்லை. 

 

திமுக எதிர்பார்த்த மத்தியில் ஆட்சி மாற்றம் வரவில்லை. தினகரனுக்கு இந்த தேர்தலில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியும் இந்த ஆட்சியை நிம்மதியாக இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து கொண்டுபோக முடியாத சூழ்நிலை உள்ளது. எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற நிலை உள்ளது. கட்சியையும் முறையாக வழிநடத்தி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 


 

இந்த நிலையில் மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதில் அதிமுகவில் சீனியர், ஜீனியர் என்ற பிரச்சனை எழுகிறது. யாராவது ஒருவர் அந்த பதவியை பெற்றிருந்தால் அதிமுக கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். மத்திய மந்திரிசபையில் அதிமுக இடம்பெறாமல் இருந்தால்தான் அதிமுக கட்சிக்கு நல்லது. அதுதான் அரசியல் ரீதியான பாதுகாப்பு. கட்சிக்குள் எந்த கருத்து வேறுபாடும் வராது. 

 

எதிர்க்கட்சிகள் பாஜகவின் மந்திரிசபையில் அதிமுகவுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லும். ஏனென்றால் மத்திய பாஜக அரசில் பங்கு வகித்தும் தமிழர்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை அதிமுகவால் தடுக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டை சொல்லுவதற்காகவும், எதிர்வரும் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக பேசி வாக்குகளை பெறுவதற்காகவும் அப்படித்தான் சொல்லுவார்கள்''.