ADVERTISEMENT

"மீடியாக்கள் முன் பேச பயமாக உள்ளது" - வாரிசு பட தயாரிப்பாளர்

04:16 PM Dec 17, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

வரும் பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் தமிழகத்தில் 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' நிறுவனத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடுகிறார். அதே பொங்கல் திருநாளை முன்னிட்டு அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'துணிவு' படமும் வெளியாகவுள்ளது. இப்படத்தை 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் வெளியிடுகிறார்.

தமிழில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே சமயத்தில் 8 ஆண்டுகள் கழித்து வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'வாரிசு' மற்றும் 'துணிவு' ஆகிய இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் முன்னதாக தெரிவித்திருந்த நிலையில், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு, "தமிழ்நாட்டில் விஜய்தான் முன்னணி ஹீரோ. அதனால் வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக உதயநிதியை சந்தித்துப் பேசப் போகிறேன்" என ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையான நிலையில் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது. பலரும் இந்த சர்ச்சை தொடர்பாக தில் ராஜுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் தில் ராஜு 'வாரிசு' படத்துக்கு திரையரங்குகள் அதிகரிப்பது தொடர்பாக உதயநிதியை சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே தில் ராஜு ஒரு நிகழ்ச்சியில் இந்த சர்ச்சை தொடர்பாகப் பேசியுள்ளார். அவர் பேசுகையில், "மீடியாக்கள் முன் பேச பயமாக உள்ளது. 45 நிமிடம் பேட்டி கொடுத்தேன். ஆனால் 20 நொடி வீடியோவை வைத்து சர்ச்சை ஆக்கிவிட்டது. 20 நொடி வீடியோவை வைத்து சர்ச்சையை உருவாக்காதீர்கள். யாரையும் பாராட்டியோ அல்லது தரம் தாழ்த்தியோ பேசவில்லை. எல்லா நல்ல படங்களையும் ஆதரிக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT