Skip to main content

"இது துணிவு படத்தின் ஒப்பீடு அல்ல" - வாரிசு படத்தின் வசூல் விவரம்

 

varisu 7 days worldwide collection

 

தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போடுகின்றன. இரு படங்களையும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்குகளில் கூடுகிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள் எல்லாம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.

 

இதையடுத்து துணிவு மற்றும் வாரிசு படங்கள் நல்ல வசூலை வாரிக்குவிப்பதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வாரிசு படம், 7 நாளில் உலகம் முழுவதும் ரூ. 210 கோடி வசூலித்துள்ளதாக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 89 கோடியும், மொத்தம் இந்திய அளவில் ரூ.141 கோடியும் வெளிநாட்டில் ரூ.71 கோடியை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

வாரிசு படம் வெளியான அதே தேதியில் வெளியான துணிவு, நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் விவரம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும்  படக்குழு இன்னும் வெளியிடவில்லை. படம் வெற்றி பெற்றது தொடர்பாக போஸ்டர் வெளியிட்டு வரும் படக்குழு ரியல் வின்னர் என்ற வாசகத்துடன் தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. விரைவில் வசூல் விவரம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இதனிடையே பாடலாசிரியர் விவேக் வாரிசு படம் ரூ.200 கோடி வசூல் செய்தது தொடர்பாக, "இது துணிவு படத்தின் ஒப்பீட்டு பதிவு அல்ல. படம் வெற்றியுடன் ஓடுவதற்கு வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார். இவர் வாரிசு படத்தின் அனைத்து பாடல்களும், படத்தின் வசனம் மற்றும் திரைக்கதையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.