/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/190_9.jpg)
விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
வரும் பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் தமிழகத்தில் 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' நிறுவனத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடுகிறார். அதே பொங்கல் திருநாளை முன்னிட்டு அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'துணிவு' படமும் வெளியாகவுள்ளது. இப்படத்தை 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் வெளியிடுகிறார்.
தமிழில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே சமயத்தில் 8 ஆண்டுகள் கழித்து வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'வாரிசு' மற்றும் 'துணிவு' ஆகிய இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் முன்னதாக தெரிவித்திருந்த நிலையில் 'துணிவு' படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தமிழ்நாட்டில் திரையரங்கு ஒதுக்குவது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் முன்னணியில் இருக்கிறார். அதனால் உதயநிதியை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் எனப் பேசப் போகிறேன். இது வியாபாரம்" என்றார். இதனால் தில்ராஜு தற்போது சென்னையில் இருப்பதாகவும் உதயநிதியை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)