Skip to main content

ரஷித்கான் தூக்கத்தைக் கெடுத்த கெட்ட கனவு! - ஐ.பி.எல். போட்டி #25 

Published on 26/04/2018 | Edited on 26/04/2018

ஐ.பி.எல். 11ஆவது சீசனின் 25ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

 

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

 

இந்த சீசன் தொடங்கியதில் இருந்து இந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றில் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி இதுவாகும். புள்ளிப்பட்டியலைப் பொருத்தவரை பஞ்சாப் 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஐதராபாத் அணி 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் மொகாலி மைதானத்தில் மோதிய போட்டியில் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வென்றது.

 

ஐதராபாத் அணி மும்பையுடனான முந்தைய போட்டியில், வெறும் 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தனது அசாதாரணமான பந்துவீச்சால் மும்பை அணியை 87 ரன்களில் ஆல்-அவுட் ஆக்கி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இத்தனைக்கும் ஐதராபாத் அணியின் முக்கியமான பவுலர் புவனேஷ்வர் குமார் அன்றைய போட்டியில் களமிறங்கவில்லை. நான்கு ஓவர்கள் வீசிய ரஷித் கான் ஒரு ஓவர் மெய்டனுடன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி 11 ரன்களே கொடுத்திருந்தார். 

 

அதேசமயம், பஞ்சாப்புடன் ஐதராபாத் அணி மோதிய முதல் போட்டியில், கிறிஸ் கெயில் சதமடித்தார். அதுதான் இந்த சீசனின் முதல் சதம். அந்தப் போட்டியில் ரஷித்கான் தான் வீசிய நான்கு ஓவர்களில் 55 ரன்கள் கொடுத்திருந்தார். இதுதான் ரஷித்கான் டி20 போட்டியில் கொடுக்கும் அதிகபட்ச ரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 55 ரன்களில் கிறிஸ் கெயில் மட்டும் ஆறு சிக்ஸர்கள் விளாசி 42 ரன்கள் எடுத்திருந்தார். உண்மையில் அந்தப் போட்டி ரஷித்கானுக்கு கெட்டக்கனவாக இருந்திருக்கக் கூடும். இன்றும் அந்த அணிகள் மோதுகின்றன. தனது பிழைகளை சரிசெய்து கொண்டு ரஷித் கான் மீண்டும் களமிறங்குவார் என நம்பலாம். போட்டியின் முடிவுக்காக காத்திருப்போம்.