நடந்துகொண்டிருக்கிற பாராளுமன்றத் தேர்தலில் மத்திய உளவுத்துறை ஒரு மிகப் பெரிய கருத்துக்கணிப்பை இந்தியா முழுவதும் எடுத்திருக்கிறது. அதில் எந்தக் காரணத்தைக் கொண்டும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து 273 என்கிற மெஜாரிட்டி மார்க்கை தொடாது என அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
இந்தத் தேர்தலில் கடந்த இரண்டு தேர்தல் களைப் போல அனைத்துவிதமான எதிர்ப்புக்களை யும் ஊதித்தள்ளும் மோடி அலை எதுவுமே வீசவில்லை. அனைத்து இடங்களிலும் தேர்தல் என்பது சாதாரண அரசியல் நடவடிக்கைகளாகவே நடந்துள்ளது. இந்த சாதாரண அரசியல் நடவடிக் கைகளினால் ஏற்படும் பா.ஜ.க. எதிர்ப்பை ஊதித் தள்ளும் இந்துத்துவா வெறி பிரச்சாரம் எங்கும் காணப்படவில்லை. ராமர் கோவில் கட்டப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் கூட "ராமர்கோவில் கட்டப் பட்டது நல்லதுதான். இந்து முஸ்லிம் மோதல் அதனால் முடிவுக்கு வந்தது' என அதை எளிதாகக் கடந்து போகிறார்கள். அதே நேரத்தில் விலைவாசி ஏற்றம், ஊழல், வேலையின்மை ஆகியவை பெரிதாக மக்கள் மத்தியில் எதிரொலிக்கிறது. ‘வளர்ச்சி’ என்கிற பா.ஜ.க.வின் ‘ரிப்போர்ட் கார்ட்’ எங்குமே வேலை செய்யவில்லை. அதைத் தாண்டி ‘ஒவ்வொரு ஊரிலும் என்ன பிரச்னை’ என்பதுவே பெரிதாக எதிரொலிக்கிறது.
முதல் கட்ட வாக்கெடுப்பு நடந்த இடங் களில் தமிழகத்தில் இரண்டு சீட்டுகள் பா.ஜ.க. ஜெயிக்கும் என மத்திய உளவுத்துறை கணிக்கிறது. ஆனால் தென் மாநிலங்களில் பா.ஜ.க. பெறும் சின்னச் சின்ன வெற்றிகள் அனைத்தும், கர்நாடகா வில் 28 சீட் பெற்ற பா.ஜ.க. குறைந்தபட்சம் 15, அதிகபட்சம் 18 சீட்டுகளை இழப்பதன் மூலம் பலவீனமாகிறது. கர்நாடகாவில் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது கொஞ்சம் நல்லநிலையில் இருந்த பா.ஜ.க. தேவகவுடாவின் பேரனின் நீலப்படம் வெளியானதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது.
மகாராஷ்டிராவில் கடந்த முறை 48 தொகுதிகளில் 41 தொகுதிகளை ஜெயித்த பா.ஜ.க., இந்தமுறை கூட்டணிக் கட்சிகளான ஷிண்டே மற்றும் அஜித்பவார் ஆகியோர் மீது நிலவும் அதிருப்தியின் காரணமாக மூன்றைத் தாண்டுவதே சந்தேகம். பீகாரில் 40ல் 39 வென்ற பா.ஜ.க., இம்முறை தேஜஸ்வி யாதவின் களப்பணியால் 15 சீட்டுகளை இழக்கும். ராஜஸ்தானில் கடந்த இரண்டு தேர்தலாக ஒட்டுமொத்தமாக 25 தொகுதிகளையும் ஜெயித்த பா.ஜ.க., இந்தமுறை பாதியை இழக்கிறது. ஹரியானாவில் குறைந்தபட்சம் 4 தொகுதிகளை இழக்கிறது. பஞ்சாப், டில்லி போன்ற மாநிலங்களில் பா.ஜ.க. எதிர்ப்பு அலை கடுமையாக வீசுகிறது.
உத்தரப்பிரதேசத்தைத்தான் பா.ஜ.க. சிறிது நம்பி இருக்கிறது. அங்கு பா.ஜ.க.வின் ஓட்டு சத வீதம் வெகுவாகக் குறைந்துவருகிறது. சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணியின் ஓட்டு சதவீதம் கணிச மாக அதிகரித்துள்ளது. அதனால் இந்த முறை 80 சீட்டுகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 50 சீட்டுகளை பா.ஜ.க. தாண்டாது. உத்தரப்பிரதேசத் தில் 4 முதல் 5 சதவீத வாக்குகள் பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. கடும் எதிர்ப்பு நிலவும் குஜராத்தில் குறைந்தது 3 சீட்டுகளை பா.ஜ.க. இழக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் குறைந்தது 5 சீட்டுகளை பா.ஜ.க. இழக்கிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் பா.ஜ.க. கடந்த முறை வென்ற 18 சீட்டு களை மீண்டும் பெற போராட வேண்டியிருக்கும். இந்தியா முழுவதும் கடந்தமுறை வெற்றி பெற்றது போல் வேறு எங்கும் பா.ஜ.க. வெற்றி பெறாது.
மோடி தனது உரையில் சொல்லும் வளர்ச்சி பற்றிய விவரங்கள் அனைத்தும் லோக்கல் காரணிகளால் தோல்வி அடைகிறது. விவசாயிகள் போராட்டம் தலித்துகளையும், உயர் சாதியினரையும் ஒருங்கிணைத்து பா.ஜ.க.வுக்கு எதிராக உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்களைத் திருப்பியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஜம்முவில் இந்துக்களின் ஓட்டை பா.ஜ.க. எதிர்பார்த்து நிற்கிறது.
சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி போன்றவை கிராமப்புறங்களிலும் பா.ஜ.க.விற்கு எதிரான பிரச்சாரத்தை கடுமையாகக் கொண்டு சென்றுள்ளன. இந்தமுறை பா.ஜ.க.வை கரை சேர்க்கும் ‘ட்ரம்ப் கார்டு’ எதுவும் பா.ஜ.க. வசம் இல்லை. மோடியின் பேச்சுக்கள் கிராமப்புற மக்களின் சுயமரியாதையை அவமானப்படுத்துவ தாக மக்கள் உணர்கிறார்கள். ஹரியானா, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் பா.ஜ.க.வினர் ஓட்டு கேட்டு மக்களிடம் செல்ல முடியவில்லை. மக்கள் வெறுப்பைக் காண்பிக்கிறார்கள்.
மணிப்பூர் பிரச்சினை கிறிஸ்தவர்களையும், வடகிழக்கு மக்களையும் பா.ஜ.க.வுக்கு எதிராகத் திருப்பியுள்ளது. பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் தேர்தல் வேலைகளை சிறப்பாகச் செய்கின்றன. ஆனால் மக்களின் எதிர்ப்புணர்வு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக பா.ஜ.க.வின் சீட்டுகளைக் குறைக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தி லும் ஏற்படும் சிறு, சிறு தோல்விகள், ஒட்டுமொத்த மாக பா.ஜ.க. பெரும்பான்மை பெறுவதை கேள்விக்குள்ளாக்கி உள்ளது என்கிறது மத்திய உளவுத்துறை. இந்த ரிப்போர்ட்டைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ள மோடி வகையறா, உத்தரப் பிரதேசத்தில் எதையாவது செய்து இந்த நிலைமையை மாற்றலாம் என கணக்குப்போட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.