Skip to main content

“மதுரை செல்லும்போதெல்லாம் பாசத்தோடு வரவேற்பார்” - கருமுத்து கண்ணன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

“மதுரை செல்லும் போதெல்லாம் பாசத்தோடு வரவேற்பார்” கருமுத்து கண்ணன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70. கருமுத்து தியாகராஜன் - ராதா தம்பதியரின் மகனான கருமுத்து கண்ணன், தியாகராஜன் கலைக்கல்லூரி, தியாகராஜன் பொறியியல் கல்லூரி, தியாகராஜன் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளராகவும் நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலராக 18 ஆண்டுகளாகத் திறம்பட செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை உடல்நலக்குறைவால் அவர் காலமானார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொது மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கருமுத்து கண்ணன் மறைந்த செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தனது தந்தை காலத்தில் இருந்தே திமுக மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் அன்பு கொண்டிருந்தவர் கருமுத்து கண்ணன். நான் எப்போது மதுரை சென்றாலும் பாசத்தோடும் இன்முகத்தோடும் வரவேற்பார். தியாகராசர் பொறியியல் கல்லூரி இயக்குநராக பணியாற்றி ஏழை மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திற்கு உதவி செய்தவர்.

 

2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் மதுரை மீனாட்சி கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டார். கலைஞரால் மாநில திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கியதில் துணை நின்றவர்.  இந்து அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்து தேவையான ஆலோசனைகளை வழங்கினார். தொழில்துறை, கல்வித்துறை, கோயில் திருப்பணிகள் என அனைத்திலும் சிறந்து விளங்கி பலருக்கு உதவி செய்தவர். கருமுத்து கண்ணன் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் மு.ல.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்