Jallikattu competition held in viralimalai which district of pudukottai

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று (01-05-24) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் பிரசித்தி பெற்ற மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் உள்ள தெய்வமானது விராலிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. இங்கு வருடம் தோறும் சித்திரை மாதத்தில் திருவிழாவிற்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது நடத்துவது என ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வாடிவாசல் அமைக்கும் பணியானது கடந்த சிலநாட்களாக நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவு பெற்றதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜல்லிக்கட்டு திடலைப் பார்வையிட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்தனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து நேற்று (01-05-24) காலை 8.20 மணிக்கு அ.தி.மு.க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு விழாவை, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 725 ஜல்லிக்கட்டு காளைகளை வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை 164 மாடுபிடி வீரர்கள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிப் போட்டுக் கொண்டு அடக்கினர்.

Jallikattu competition held in viralimalai which district of pudukottai

தேர்தல் விதிமுறையின் காரணமாக இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் ஏதும் வழங்கப்படவில்லை. இதில் 13 மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் 12, மாட்டின் உரிமையாளர்கள் 15 மற்றும் ஒரு போலீஸ் என 41 பேர் காயமடைந்தனர். அதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கும், 4 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற அனைவருக்கும் வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisment

இந்த ஜல்லிக்கட்டு விழாவில் விராலிமலை வட்டாட்சியர் கருப்பையா, வடக்கு மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, ஒன்றிய செயலாளர் பழனியாண்டி மற்றும் சர்வ கட்சியினர் கலந்து கொண்டு போட்டியினைக் கண்டு ரசித்தனர். பாதுகாப்பு பணியில் இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.