Skip to main content

'வாரம் ஒரு குளம்' தூர் வாரும் இளைஞர் பட்டாளம்!

Published on 28/06/2018 | Edited on 28/06/2018
p3

 

ஆக்கிரமிப்புகளாலும், அவ்வப்போது பராமரிக்காததாலும் புதுச்சேரியில் நூற்றுக்கணக்கான ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் மறைந்து வருகின்றன. இப்படியே போனால் எதிர்காலத்தில் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் மக்கள் தவிக்க நேரிடும்.  ஆண்டுக்காண்டு பொழிகின்ற  பருவ மழை பொய்த்தாலும் எப்போதாவது பொழிகின்ற மழையின் நீரை  சேமித்து வைக்கும் தொலை நோக்கு திட்டங்களை அரசாங்கங்கள் செயல்படுத்துவது இல்லை.

 

2015 ஆம் ஆண்டு பொழிந்த பெருமழையால் புதுச்சேரி முழுவதும் இருந்த நீர்நிலைகள் நீரால் நிரம்பி வழிந்தன. அதேசமயம்  நீர் நிலைகள் தூர்வாரி பராமரிக்கப்படாததால் இயற்கை கொடுத்த நீரை  முழுமையாக சேமித்து வைக்க இயலாமல் போனது . அப்போது நீர் நிலைகளில் தேக்கி வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டிய நீர் வெள்ளமாகி, சேதங்களை ஏற்படுத்தியதோடு அல்லாமல் வீணாக கடலுக்கு சென்று கரைந்து போனது. 

 

p2

 

வீணாக செல்லும் நீரை சேமித்து வைத்தால் என்கிற எண்ணம் புதுச்சேரி இளைஞர்கள் சிலருக்கு ஏற்பட்டது. நீரை தேக்கி வைக்கும் குளத்தை தூர் வாறும் முயற்சியில் களம் இறங்கினர். புதுச்சேரியை இயங்கும் 'உயிர்த்துளி உறவுகள்', மற்றும் விழித்தெழுந்த தமிழ் மாணவர் இளைஞர் பேரவை'யினருடன் ' இன்னும் சில இளைஞர்கள்  அசோக், ரமேஷ், பிரபு ஆகியோருடன் இணைந்து  'மிஷன் கனகன் டிசம்பர் 31' எனும் அமைப்பினை தோற்றுவித்தனர். அந்த  அமைப்பின் மூலம் வாரம் ஒரு குளத்தை தூர் வாருவது  முடிவு செய்தனர். அதன்படி  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையில் குளங்களை தூர் வாரும் பணியை செய்து வருகின்றனர். இவர்களுடன் அப்துல்கலாம் தொலை நோக்கு அறக்கட்டளை, அமிர்தா வித்யாலயா பெற்றோர்கள் நல சங்கத்தினரும் இணைந்து இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

 

புதுச்சேரியில்  கொம்பாக்கம், மூலக்குளம், கோபலன் கடை,  சுல்தான்பேட்டை, நோணாங்குப்பம், கடுவனூர், தானாம்பாளையம், தேங்காய்த்திட்டு, ஆயிகுளம்  என பத்துக்கும் மேற்பட்ட குளங்கள் தூர் வாரப்பட்டு, தூய்மை படுத்தப்பட்டுள்ளன. 

p1

 

இதுகுறித்து இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் கேட்டதற்கு, " 'மழை  நீர், நமது உயிர் நீர்' என  தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் குப்பை கூளங்கள், செடி கொடிகள் மண்டிக்கிடக்கும் நீர்நிலைகளை தூர்வார முடிவு செய்தோம். முதலில் கனகன் ஏரியை தேர்ந்தெடுத்து 2017 டிசம்பர் 31ம் தேதி களமிறங்கினோம். நாங்கள்  30 சதவீதம் தூர் வாரிய பின்  அதனை பார்வையிட்ட ஆளுநர் கிரண்பேடி  முழுவதும் தூர்வாரி, தூய்மைபடுத்தி செப்பனிட நடவடிக்கை எடுத்தார். மேலும் கனகன் ஏரியில் படகு பயணமும் விட்டார்.  இது எங்களுக்கு உற்சாகத்தையும், உந்து சக்தியையும் அளித்தது. 

 

அதையடுத்து  வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குளங்களை தூர் வாருவது என முடிவு செய்வோம்.  இதற்காக 'மிஷன் கனகன் டிசம்பர் 31' என்ற புதிய அமைப்பைத் தொடங்கினோம். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்று கூடுவோம். எங்களால் முடிந்த தொகையை அளித்து ஒரு குளத்தை முடிந்த வரையில் தூர்வாரி முடிக்கிறோம். தூர்வார ஒரு குளத்துக்கு ரூபாய் 7000 முதல் 10000 வரை செலவாகிறது. குளங்களை தூர் வாருவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊருக்குச் சென்று அப்பகுதி இளைஞர்கள், முக்கிய பிரமுகர்களை அழைத்து பேசுவோம். குளத்தை தூர் வாரிய பின்னர் அவற்றை பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். அவர்கள் பராமரிப்பதாக உத்தரவாதம் அளித்தால் மட்டுமே, அந்த குளத்தை தூர் வாருவோம்.  குளங்களை தூர் வாருவதுடன்,  நிறுத்தாமல் வாரம் ஒருமுறை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறோம். எங்களுடைய இந்த வேலைகளை பார்த்து அந்தந்த பகுதியில் உள்ள மக்கள்  பாராட்டும் போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. இந்தப் பணியை தொடர்ந்து செய்வோம் என்கின்றனர். 

 

'நீரின்றி அமையாது உலகு' என்பார்கள். இயற்கை கொடுக்கும் நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின்  சேவை பாரட்டுக்குறியது. ஊருக்கு ஊர்  இளைஞர்கள் தொலை நோக்கு பார்வையுடன் நீர் நிலைகளை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டால் எதிர்கால சந்ததிக்கு உயிர் நீர் உறுதியாகும்.

சார்ந்த செய்திகள்