
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.
மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம் தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக ஏராளமானோர், இருசக்கர வாகனங்கள் மூலம் கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில் பட்டப் பகலில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. ஆனால் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள் தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.