Skip to main content

மாற்றுத்திறனாளிகள் நலனைப் பாதுகாப்போம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

We will protect the welfare of the disabled - Chief Minister M.K.Stalin

 

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3ம் நாள் அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3ம் நாள் அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

 

நமது அரசு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிகளின் உடல் ரீதியான குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கவும், சிறப்புக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழங்கவும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் பிற நலத் திட்டங்களுக்காகவும் வழங்கப்படும் நிதியினை இந்த அரசு உயர்த்திக் கொண்டே வருகிறது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மாத பராமரிப்பு உதவித்தொகை ரூபாய். 2000/- என உயர்த்தி வழங்கியும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கும் பல புதிய முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றன.

 

மேலும், சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் முழு பங்கு வகிக்கும் வகையில் பொதுக் கட்டடங்களில் தடையற்ற சூழல் அமைத்தல், நவீன உதவி உபகரணங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து மறுவாழ்வு உதவிகளும் மாற்றுத்திறனாளிகள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்கள் வசிக்கும் இருப்பிடம் மற்றும் சமுதாயத்திலேயே கிடைக்கும் வகையில் கோட்ட அளவில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கும் பணியும் "உரிமைகள் திட்டம்" மூலம் செயல்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறாக நமது தமிழ்நாடு அரசு, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் உறுதி ஏற்றுள்ள, "எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்". "சமுதாயத்தில் ஒருவரும் விடுபடக்கூடாது" போன்ற கொள்கைகளைப் பின்பற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது.

 

எனவே, இந்த நாளில் ‘மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையான நீடித்த இலக்குகளை அடைந்திடவும், அவர்களின் நலனைப் பாதுகாக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என அனைவரும் ஒன்றிணைந்து ஏற்போம். உறுதி ஏற்போம் எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்