Skip to main content

வென்றதா அமீரின் அரசியல் களம்? - 'உயிர் தமிழுக்கு' விமர்சனம்!

Published on 11/05/2024 | Edited on 18/05/2024
ameer uyir thamizhukku movie review

ஆன்ட்டி இந்தியன் படம் மூலம் சர்ச்சைகளை ஏற்படுத்தி சலசலப்பை உண்டாக்கிய தயாரிப்பாளர் ஆதம்பாவா. இப்போது உயிர் தமிழுக்கு படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். இதுவரை கேங்ஸ்டர் ஆக பார்த்த அமீர் முதல் முறையாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படம் எந்த அளவு ரசிகர்களை ஈர்த்துள்ளது?


கேபிள் டிவி தொழில் செய்து வரும் அமீர் பார்த்த உடனேயே நாயகி சாந்தினி ஸ்ரீதரன் மீது காதல் வயப்படுகிறார். நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கவுன்சிலர் தேர்தலுக்கு போட்டியிடுகிறார். நாயகியை எப்படியாவது கரம் பிடிக்க வேண்டும் என்று எண்ணும் அமீர் தானும் கவுன்சிலர் தேர்தலுக்கு நாயகிக்கு எதிர் முனையாக போட்டியில் களம் இறங்குகிறார். அந்தத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அமீர் வெற்றி பெற்று தன் காதலிலும் வெற்றி பெறுகிறார். இந்தக் காதலுக்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. வும் சாந்தினி யின் தந்தையுமான ஆனந்தராஜ் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் அமீருக்கும் அவருக்கும் பகை ஏற்படுகிறது. இதற்கிடையே ஆனந்தராஜ் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். ஆனந்தராஜ் மீது இருக்கும் பகையின் காரணமாக அமீர் தான் இந்தக் கொலையை செய்தார் என நாயகி சாந்தினி முடிவெடுத்து அவரை ஜெயிலுக்குள் தள்ளி விடுகிறார். பெயிலில் வெளியே வரும் அமீர் ஆனந்த்ராஜ் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் நாயகி சாந்தினி ஸ்ரீதரணை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று சாந்தினியை அமீர் கரம் பிடித்தாரா? இல்லையா? ஆனந்தராஜை கொலை செய்தது யார்? அமீர் நிரபராதியா? அல்லது குற்றவாளியா? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

ameer uyir thamizhukku movie review

இதுவரை நாம் கேங்ஸ்டர் ஆகவும், டெரராகவும் பார்த்து பழகிய அமீரை முதல் முறையாக காமெடி களத்தில் இறக்கி விட்டிருக்கிறார் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஆதம்பாவா. இயக்குநர் அமீரா இப்படி எல்லாம் நடிப்பது என வியக்க வைக்கும் அளவுக்கு சிறப்பான காமெடி நடிப்பு மூலம் பார்ப்பவர்களுக்கு கிச்சு கிச்சு மூட்டி இருக்கிறார். ஒரு ஜனரஞ்சகமான அரசியல் நையாண்டி கதையைக் கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் காமெடியுடன் சொல்லி குடும்பத்துடன் சென்று ரசிக்கும்படியான காமெடி சட்டையர் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆதம்பாவா. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை கலகலப்பாகவும், அரசியல் நையாண்டியையும் ஒன்று சேர்த்து நகரும் இத்திரைப்படம் போகப்போக சமகால அரசியலையும் ஒரு கை பார்த்துவிட்டு அதனுடன் மென்மையான காதல் கதையையும் சேர்த்து கொடுத்து ரசிகர்களுக்கு பீல் குட் படம் பார்த்த உணர்வை கொடுத்துள்ளது. இருந்தும் காமெடி காட்சிகளில் இன்னும் கூட சிறப்பாக கையாண்டு திரைக்கதையையும் சற்று வேகம் படுத்தி இருக்கலாம். கிட்டத்தட்ட ஐந்து வருடம் இப்படம் தயாரிப்பில் இருந்ததனால் இன்றைய ட்ரெண்டுக்கு சில விஷயங்களை சேர்த்து இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். 

நாயகன் அமீர் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்தப் படத்தில் காமெடி செய்திருக்கிறார். அது பல இடங்களில் ரசிக்கவும் வைத்திருக்கிறது. இருந்தும் சில இடங்களில் நம்மை சோதிக்கவும் வைத்திருக்கிறது. அதைக் கொஞ்சம் சரி செய்து இருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். நாயகி சாந்தினி ஸ்ரீதரன் தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அவர் பேசும் வசன உச்சரிப்பில் தமிழ் சற்று மிஸ்ஸிங். மற்றபடி அழகாக இருக்கிறார் அளவாக நடித்திருக்கிறார். அமீருடன் சேர்ந்து காமெடி பட்டாளமே நடித்திருக்கிறது. அவர்கள் அனைவருமே அவரவர் வேலையைச் சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். ஆனந்தராஜ் வழக்கமான வில்லத்தனம் காட்டிவிட்டு சென்று இருக்கிறார். கூட இருந்து குழி பறிக்கும் கதாபாத்திரத்தில் எப்பொழுதும் போல் சிறப்பாக நடித்திருக்கிறார் மறைந்த நடிகர் மாரிமுத்து. 

ameer uyir thamizhukku movie review

வித்யாசாகர் இசையில் பாடல்கள் சுமார் பின்னணி இசை ஓகே. தேவராஜ் ஒளிப்பதிவில் அரசியல் தேர்தல் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமகால அரசியலை நையாண்டி செய்து இயக்கியிருக்கும் உயிர் தமிழுக்கு திரைப்படம் அதனுள் காதல் கதையும் வைத்து ரசிகர்களுக்கு குடும்பத்துடன் சென்று சிரித்து ரசிக்கும்படியான படமாக அமைந்துள்ளது. லாஜிக்குகளை மறந்துவிட்டு என்டர்டைன்மென்ட் காக மட்டும் பார்க்கும் பட்சத்தில் உயிர் தமிழுக்கு ரசிக்க வைக்கும். 


உயிர் தமிழுக்கு - புதிய கூட்டணி!
 

சார்ந்த செய்திகள்