Skip to main content

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Published on 04/09/2022 | Edited on 04/09/2022

 

jkl

 

கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் சாலைகளில் வைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் சாதாரணமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி இப்போது ஏரியாவுக்கு ஏரியா, தெருவுக்கு தெரு பிரமாண்ட சிலைகளை வைத்துக் கொண்டாடுகிறார்கள். தமிழகத்திலும் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்விற்கான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் 21 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

சென்னை, ஆவடி, தாம்பரம் ஆணையரகங்களை சேர்த்து சுமார் 21,800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல் இந்த பணியில் 2,650 ஊர்காவல் படையினரும் ஈடுபட உள்ளனர். சென்னையில் 1,362 சிலைகளும், ஆவடியில் 503 சிலைகளும், தாம்பரத்தில் 699 சிலைகளும் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று விநாயகர் ஊர்வலம் நடப்பதால் 12மணி முதல் இரவு 8 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாலாஜா சாலை, பாரதி சாலை, ஆர்.கே சாலை, பெசன்ட் சாலை, கச்சேரி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக செல்லாமல் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பட்டினப்பாக்கம், திருவொற்றியூர், காசிமேடு, நீலாங்கரை ஆகிய கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விநாயகர் சிலை ஊர்வலம்; ஈரோடு மாநகர் பகுதியில் 500 போலீசார் குவிப்பு

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Ganesha Statue Dissolving Procession; 500 police in Erode metropolitan area

 

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஈரோட்டில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 1,429 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், ஈரோடு மாநகரில் மட்டும் 185 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், ஈரோடு மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதற்காக மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 185 விநாயகர் சிலைகளும் ஈரோடு சம்பத் நகருக்கு நேற்று வாகனங்களில் கொண்டு வரப்பட்டது. பின்னர், ஊர்வலமானது ஈரோடு சம்பத் நகர் நால் ரோட்டில் துவங்கி, பெரியவலசு நால்ரோடு, முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி. சாலை, காவிரி சாலை, கருங்கல்பாளையம், கருங்கல்பாளையம் போலீஸ் சோதனைச் சாவடி வழியே காவிரி ஆற்றின் பழைய பாலம் பகுதிக்குச் சென்றடைந்தது. அங்கு ஒவ்வொரு சிலைகளாக ஆற்றில் கரைக்கப்பட்டது.

 

காவிரி ஆற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்திற்கும், ஊர்வலம் செல்லும் பாதைகளிலும் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க 500 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஊர்வலத்துக்காக போக்குவரத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஊர்வலம் செல்லும்போது அந்த சில மணி நேரம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,429 சிலைகளில் நேற்று  வரை 770 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Next Story

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளீயீடு

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Publication of guidelines for melting Ganesha idols

 

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

 

விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொடுத்துள்ளது, அதனைப் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளைக் கரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இயற்கையான, எளிதில் மக்கக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்கள் அதாவது களிமண், காகிதக்கூழ். இயற்கை வண்ணங்கள் போன்றவற்றைக் கொண்டு செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.

 

சிலைகள் கரைக்கப்படுவதற்கு முன்பு சிலைகளில் அலங்கரிக்கப்பட்ட துணிகள். பூமாலைகள். அலங்கார தோரணங்கள், இலைகள், செயற்கை ஆபரணங்கள் போன்றவை அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட சிலைகள் மட்டுமே பாதுகாப்பான முறையில் குறிப்பிடப்பட்ட இடத்தில் கரைக்க வேண்டும். சிலைகள் கரைக்கப்படும் இடத்தில் சேகரிக்கப்படும் துணிகள், பூமாலைகள், இலைகள், அலங்காரப்பொருட்கள் போன்றவை முறையாக சேகரிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் அகற்றப்பட்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாளப்பட வேண்டும். மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணிவகைகள் இருப்பின், அதனை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மறுபயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கலாம். மேலும், மூங்கில் மற்றும் மரக்கட்டைகள் போன்ற பொருட்கள் இருப்பின் அதனையும் மறுபயன்பாட்டிற்கு அனுப்பலாம்.

 

சிலைகளிலிருந்து அகற்றப்பட்ட துணிகள், பூமாலைகள், அலங்கார தோரணங்கள், மூங்கில்கள் போன்றவற்றை நீர்நிலைகளின் கரை ஓரங்களில் கொட்டி, தீயிட்டு எரிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் பூஜை செய்யப்பட்ட களிமண் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்காமல் கூடுமானவரை வீட்டிலேயே வாளியில் நீர் நிரப்பி அதில் சிலையினை மூழ்கவைத்து கரைக்கலாம். தெளிந்த நீரினை வடிகாலில் வெளியேற்றலாம். சேற்றினை உலரவைத்து தோட்டத்தில் மண்ணாகப் பயன்படுத்தலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.