Skip to main content

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.

சார்ந்த செய்திகள்