Skip to main content

தொழிலாளர்கள் - வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல்! - சிக்கலில் காந்தி மார்க்கெட் விவகாரம்!

Published on 12/06/2018 | Edited on 12/06/2018
gand


திருச்சியில் காந்தி மார்க்கெட் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு திருச்சி - மதுரை பைப்பாஸ் அருகே ஒருங்கிணைந்த மார்க்கெட் ஒன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டது.

காந்தி மார்க்கெட் வியாபாரிகளில் பலர் இந்த ஒருங்கிணைந்த மார்க்கெட் எங்களுக்கு போதுமானதாக இல்லை. எங்கள் வசதிக்கு இல்லாமல் கட்டியிருக்கிறார்கள் என்றும் எங்களுக்கு தகுந்தார் போல் கடைகளை மாற்றி அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடைகள் மாற்றி அமைக்கப்பட்டு தற்போது கடைகள் ஒதுக்குவதற்கான வேலைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 

 

இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள வெங்காய மண்டி வியாபாரிகள் மதுரை பைபாஸ் ரோடு மார்கெட் எங்களுக்கு தேவையில்லை எங்களுக்கு சொந்தமான இடம் தஞ்சை பால்பண்ணையில் இருக்கிறது என்றும் அந்த இடத்திற்கு நாங்கள் செல்கிறோம் என்று கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அறிவித்து புதிய கடைகளை கட்டி கடந்த ஜீன் 3 தேதி திறப்பு விழாவும் நடைபெற்றது.

இந்த நிலையில் அங்கு வேலை செய்யும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் அனைவரும் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலித்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கந்தன் தலைமையிலான நிர்வாகிகள், தொழிலாளர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அனைவரும் பச்சை நிற டி சர்ட் அணிந்து வந்தனர். கலெக்டர் ராஜாமணியிடம் கோரிக்கை மனு கொடுத்து வெளியே வந்த சங்க தலைவர் கந்தன் நம்மிடம்,

திருச்சி பழைய பால்பண்ணையில் கடந்த 3ம் தேதி புதிய வெங்காய மண்டி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் புதிய கட்டிடம் 3ம் தேதி தான் திறக்கப்பட்டதே தவிர பணிகள் கடந்த 2014 முதல் நடந்து வருகிறது. அப்போது அரியமங்கலம், திருவெறும்பூர், ஆயில்மில், காட்டூர், வரகனேரி, செந்தண்ணீர்புரம் பகுதியை சேர்ந்த நாங்கள் சென்று வேலை கேட்டதால் எங்களுக்கு வேலை கொடுத்தார்கள்.
  gan



அதே நேரம் சப்-ஜெயில் ரோட்டில் செயல்படும் வெங்காய மண்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள், பால்பண்ணை வெங்காய மண்டிக்கு வேலைக்கு வர மறுத்து விட்டனர். புதிய கட்டிடத்தில் மார்க்கெட் ஆரம்பித்த பின்னரும் எங்களுக்கே பணி வழங்க வேண்டும் என கேட்டோம். இதனை வியாபாரிகளும் ஏற்றுக்கொண்டனர். எனவே திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலித்தொழிலாளர்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு புதிய சங்கத்தை உருவாக்கி, அதில் எங்களுக்கே தொடர்ந்து வேலை வழங்கிட வியாபாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோர்ட்டிலும் உத்தரவு பெற்றோம்.

தற்போது எங்கள் சங்கத்தில் 171 சுமை தூக்கும் கூலித்தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். எங்களுக்கு கூலி ஒப்பந்தமும் போடப்பட்டது. 2018 முதல் 2021 வரை மறு கூலி ஒப்பந்தமும் போடப்பட்டு விட்டது. இந்த நிலையில் சப்-ஜெயில் ரோட்டில் சுமை தூக்கும் பணி மேற்கொண்டு வரும் ஒரு பிரிவினர் புதிதாக துவக்கப்பட்ட மார்க்கெட்டிலும் தாங்களே சரக்கு ஏற்றி இறக்குவோம் என கூறி புதிய மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகளை மிரட்டி தங்களுக்கே வேலை தர வேண்டும் என கேட்டும், மார்க்கெட்டை முற்றுகையிட்டதால், வியாபாரிகள் மற்றும் கூலித்தொழிலாளர்களை அச்சுறுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எங்களையும் வெளியேற வேண்டும் என கொலைமிரட்டல் விடுத்தும் உயிருக்கு அச்சம் ஏற்படுத்திக்கொண்டு வருகிறார்கள். இதனால் பழைய பால்பண்ணை வெங்காய மண்டி பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் எங்களுக்கு பணிபாதுகாப்பற்ற நிலையும் உருவாகி உள்ளது. கோர்ட் உத்தரவுப்படி எங்களுக்கு வேலை தரும் வியாபாரிகளுக்கும், வேளாண் பொருட்களை கொண்டு வரும் விவசாயிகளுக்கும், பொருட்கள் வாங்க வருவோருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மேலும் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் செயல்படுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

இதை திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனே தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் இல்லையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையே பெரிய சட்ட ஓழுங்கு சூழல் ஏற்படும் என்று வியாபாரிகள் தரப்பில் நம்மிடம் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்