Skip to main content

அதிரவைத்த திருமா - கோபமடைந்த வைகோ - சமாதானப்படுத்திய ஸ்டாலின்: எஸ்.சி/எஸ்.டி சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்!

Published on 16/04/2018 | Edited on 16/04/2018
sta


தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நீர்த்து போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து நாடுமுழுவதும், கடந்த வாரம் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த வாரம் திமுக தலைமையில் நடந்த தோழமை கட்சிகள் கூட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

sta


திமுக தலைமையில் தொடர்ந்து காவிரி போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் இந்த போராட்டம் நடைபெற்று இருக்கிறது. தனது மருமகன் மரணமடைந்த துயரத்தில் இருக்கும் வைகோவிற்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்கவே அவரும் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன்,  "நாம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வருகிறோம். ஆஷிபா சீரழிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என பாஜக அமைச்சர்கள் ஊர்வலம் செல்கின்றனர்.

இந்த விவகாரத்தில் பல கண்டனக் குரல்கள் எழுந்த பிறகே பிரதமர் கண்டனம் தெரிவிக்கிறார். மத்தியில் மோடி, மாநிலத்தில் பழனிசாமி ஆட்சியில் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போக செய்துள்ளது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்த தீர்ப்பு தலித்களின் சிறிய அளவிலான பாதுகாப்பையும் பறித்துள்ளது. மோடி அரசு தலித்களுக்கு எதிரான அரசாக உள்ளது. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான கொடுமைகளை மோடி அரசு வேடிக்கைப் பார்க்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றார்.
 

sta


மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும் போது, "காவிரி போராட்டம் நடைபெறாமல் இருந்திருந்தால் வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டத்தைவிட தமிழகத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க முடியும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையே ரத்து செய்யும் காரியத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆணவ சாதி வெறியோடு வழங்கப்பட்டுள்ளது.

இது தீர்ப்பல்ல, அநீதி மட்டுமல்ல, 50 ஆண்டுகளாக சமூக நீதிக்காக நடத்தப்பட்ட போராட்டத்தை கொச்சைப்படுத்தியிருக்கிறது. தீர்ப்பு மீது மத்திய அரசு கபட நாடகமாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்த தீர்ப்பை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து எதிர்க்கட்சிகளும் அந்த முயற்சியை மேற்கொள்ளும்" என்றார்.
 

sta


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும் போது "பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக போராடியது. தாழ்த்தப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களை காவல்துறை 99 சதவீதம் ஏற்றுக்கொள்வதில்லை. இந்தியா முழுவதும் காவல் நிலையங்களில் தாழ்த்தப்பட்டோரின் புகார்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, ஏற்றுக்கொள்ளப்படுபவை இரண்டு மாதங்களில் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

வருமானவரித் துறை, அமலாக்கத்துறை சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதில்லையா? எந்த சட்டம் சரியாக பயன்படுத்தப்படுகிறது? வன்கொடுமை தடுப்புச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களால் தவறாக பயன்படுத்தப்படுவதில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும், அரசின் 9-வது அட்டவணையில் சட்டத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும், சிறுபான்மை மக்கள், தலித் மக்களுக்கு எதிரான மோடி அரசை தூக்கியெறியப்படும் வரை போராட வேண்டும். மேலும் அவர் பேசும் போது அம்பேத்கருக்கு முன்னரே வள்ளலார் தொடங்கி பலரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்கள் என்று பேசி அதிரவைத்தார்.

திருமாவளவன் பேசும் போதே திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன், வைகோ அருகில் சென்று இரண்டு நிமிடம் மட்டும் பேச்சை முடிக்குமாறு கூறவே அவர் கடுப்பானதை முகத்தில் பார்க்க முடிந்தது.

அதன் பின்னர் மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேசும் போது "வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளும் தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நீதியை மத்திய அரசு பறித்துவிட்டது. நண்பர் ஜெ.அன்பழகன் என்னை இரண்டு நிமிடம் மட்டும் பேச சொல்லி வேண்டுகோள் விதித்தார் அதன் படி நான் பேச்சை முடிக்கிறேன் என்று முடித்து விட்டார்.

மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு முன்னதாக வைகோவின் மருமகன் மரணமடைந்ததற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கவே இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் பேச்சை தொடங்கினார்.
 

sta


திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் "சமூக நீதிக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டம் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்காக தனி அமைச்சகம், கான்கிரிட் வீடுகள், இடஒதுக்கீட்டில் 16 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. சமத்துவபுரங்கள் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

பாஜக ஆட்சியில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நாளும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெறுவதே சாதனை. உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து உடனடியாக சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்திருக்க வேண்டும். காவிரி போராட்டம் இல்லையென்றால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மீதான தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தில் மிகப்பெரிய கிளர்ச்சி உண்டாகியிருக்கும். உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உடனடியாக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் மத்திய அரசு வெளியிட வேண்டும். மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும். ஜெ.அன்பழகன் என்னையும் அதே 2 நிமிடத்தில் முடிக்கும் படி கூறினார் அதனால் முடித்துக்கொள்கிறேன் என்றார்.

சார்ந்த செய்திகள்