பேருந்து நிறுத்தத்தில் நின்ற பள்ளி மாணவரை தாக்கிய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காணிக்கராஜ் நகரை சேர்ந்தவர் இரவி. இவருடைய மகன் வில்சன் (வயது-14). இவர் அருவங்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்புவதற்காக மாணவர் வில்சன், அருவங்காடு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது பள்ளி மாணவிகள் சிலரும் அந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த அருவங்காடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன், திடீரென்று பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவர் வில்சனை லத்தியால் தாக்கினார்.
சப்–இன்ஸ்பெக்டர் தாக்கியதில் கால் மற்றும் கைகளில் இலேசான காயம் ஏற்பட்டிருந்த மாணவர் வில்சனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபற்றி தகவலறிந்ததும் அருவங்காடு மெயின் கேட் பகுதியில் வில்சன் படிக்கும் பள்ளியின் மாணவ–மாணவிகள், பொதுமக்கள் 500–க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அவர்கள் சப்–இன்ஸ்பெக்டர் மனோகரனை கண்டித்து குன்னூர்–ஊட்டி சாலையில் நின்று மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வெலிங்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது காரணமில்லாமல் மாணவரை தாக்கிய சப்–இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தெரிவித்ததுடன், உடனடியாக இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் செய்தி அனுப்பினர்.
இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக குன்னூர்–ஊட்டி ரோட்டில் மாலை 5.45 மணி முதல் 6.45 மணி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவே மாணவரை தாக்கிய சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
- பெ.சிவசுப்பிரமணியம்