Skip to main content

என் மகனை பார்த்து 27 வருடம் ஆகிறது: ஒவ்வொரு நாளும்...: எடப்பாடி, மோடிக்கு 72 வயது மூதாட்டி கடிதம்

Published on 14/09/2018 | Edited on 14/09/2018


 

edappadi palanisamy


27 ஆண்டுகளாக என்னை விட்டு பிரிந்த மகனை இது நாள்வரை நான் கண்டதில்லை. 72 வயதாகும் என்னை பராமரிக்கவாவது எனது மகனை என்னிடம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று சாந்தன் தாயார் மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனை விடுவிக்குமாறு அவரின் தாய் மகேஷ்வரி இலங்கையில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 
 

அந்த கடிதத்தில், 
 

எனது பெயர் தில்லையம்பலம் மகேஸ்வரி. இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் வசித்து வருகிறேன். என்னுடைய வயது 72 ஐக் கடக்கின்றது. என்னுடைய மகனான சாந்தன் அவர்கள் மதிப்பிற்குரிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 27 ஆண்டுகள் கடந்த நிலையில் சிறையில் வாடுகின்றார்.

 

edappadi palanisamy


 

அவரது விடுதலைக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது அதிகாரத்தை பயன்படுத்தி கருணை அடிப்படையில் விடுதலைக்கான முடிவை எடுத்திருந்தார். அவரது முடிவை பரிந்துரைத்ததற்கு எம் குடும்பம் என்றும் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. வெகு விரைவில் என் மகன் என்னிடம் கிடைக்க ஆவன செய்யும்படி தங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். 
 

1991ம் ஆண்டு என்னை விட்டு பிரிந்த மகனை இது நாள்வரை நான் கண்டதில்லை. ஒவ்வொரு தடவையும் அவருக்கு தூக்கு தண்டனை என அறிவிக்கப்பட்ட போதும் நாமும் தூக்கு மேடைக்கு ஏறியிறங்கிக் கொண்டு தான் இருந்தோம்.ங கடந்த 2013ம் ஆண்டு அவர் தந்தையான தில்லையம்பலமும் மாரடைப்பால் இறந்துவிட்டார். எனது ஒற்றைக் கண் பார்வையும் தற்போது வலுவிழந்துவிட்டது.
 

27 ஆண்டுகள் அவருக்கு மட்டுமளிக்கப்பட்ட தண்டனையல்ல. எம் குடும்பமும் ஒவ்வொரு நாளும் நரகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தயவு செய்து என் இறுதிக் காலத்தில் என்னை பராமரிக்கவாவது எனது மகனை என்னிடம் அளிக்கும்படி மன்றாடி வேண்டி நிற்கிறேன் என கூறியுள்ளார். 
 


 

சார்ந்த செய்திகள்