Skip to main content

பயிர்க்காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட வைகோ வேண்டுகோள்

Published on 02/09/2017 | Edited on 02/09/2017
பயிர்க்காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட வைகோ வேண்டுகோள்

இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய பயிர்க்காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இயற்கைச் சீற்றம், வறட்சி போன்ற காரணங்களால் வருவாய் இழப்பிற்கு ஆளாகின்ற விவசாயிகளை ஓரளவு பாதுகாக்க பயிர்க்காப்பீட்டு திட்டம் நடைமுறையில் உள்ளது. இப்பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

கடந்த 2015-16 மற்றும் 2016-17 நிதி ஆண்டுகளில் ஒருபுறம் கடுமையான வறட்சியும், மறுபுறம் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கு உரிய வருவாய் ஈட்ட முடியாமல் பலத்த நட்டத்திற்கு ஆளாகினர். தமிழக அரசு கூட வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தது. கடந்த இரண்டு நிதியாண்டுகளில் விவசாயிகள் பெரும் வருவாய் இழப்பிற்கு ஆளானதுடன் தேசிய வங்கிகளிலும் நகைகளை அடகு வைத்து மீட்க முடியாத துன்பத்துக்கு ஆளாகி தவிக்கின்றனர்.

2015-16 நிதியாண்டில் மானாவாரி மற்றும் இறவைப் பயிர் இழப்பிற்கு எவ்விதப் பயிர்க்காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. 2016-17 நிதியாண்டில் நெல், கரும்பு, வாழை போன்றவற்றிற்கு மட்டும் பெயர் அளவிற்கு பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

மானாவாரிப் பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, வேர்க்கடலை, உளுந்து, பாசிப்பயறு போன்றவற்றிற்கு எவ்வித பயிர்க்காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. வருவாய் ஆதாரத்தை இழக்கும்பட்சத்தில் அதில் இருந்து சிறிதளவேனும் மீள்வதற்காக பயிர்க்காப்பீட்டுக் கட்டணம் செலுத்தி உள்ள விவசாயிகளின் இழப்பீட்டிற்கு பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், வருவாய் இழந்து தவிக்கின்ற விவசாயிகளுக்கு சொற்ப ஆறுதலை அளிக்கும் பயிர்க்காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படாதது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயலாகும்.

தமிழக அரசு ஒரு சிறிதும் காலம் தாழ்த்தாது இயற்கைச் சீற்றம் மற்றும் வறட்சியால் பேரிழப்பிற்கு ஆளாகித் தவிக்கின்ற மானாவாரி விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகள் அனைவருக்கும் கடந்த இரண்டு நிதியாண்டுகளுக்கும் உரிய பயிர்க்காப்பீட்டுத் தொகையைக் கணக்கிட்டு வழங்கிட முன்வருமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்