Skip to main content

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேராசிரியர் எஸ்தர் டப்லோ சந்திப்பு!

Published on 29/03/2022 | Edited on 29/03/2022

 

Professor Esther Dablo meets with Chief Minister MK Stalin!

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29/03/2022) முகாம் அலுவலகத்தில், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ்தர் டப்லோ சந்தித்துப் பேசினார்.

 

அப்போது, பேராசிரியர் எஸ்தர் டப்லோ, கொள்கை முடிவுகளுக்கும், அரசு முதலீடுகளுக்கும் தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு அரசின் நிலையான உறுதிப்பாட்டை பாராட்டினார். மேலும், மாநிலத்தில் உள்ள நலிந்த பிரிவினருக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தைச் சீர்திருத்துவதற்கான பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு, முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தையும் உயர்த்தியமைக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். மக்கள்தொகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு, குறிப்பாக தனியாக வாழும் முதியோர்களுக்கு வலுவான பாதுகாப்பு வலையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

 

மக்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டமானது, அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கைத் தரம் என்ற அரசின் குறிக்கோளுக்கு ஒரு முன்னோடி முயற்சி என்று பாராட்டினார். மாநிலத்தில் ஏழைகள் மற்றும் முதியவர்கள் எதிர்கொள்ளும் பெரும் சவால்களை வெளிக்கொணர அடுத்த எட்டு ஆண்டுகளில் தொடர்ச்சியான ஆய்வுகள் நடத்தப்படும் என்றும், இப்பிரச்சனைகளுக்கான கொள்கை தீர்வுகளை உருவாக்க இது பயன்படும் எனக் குறிப்பிட்டார்.

 

தரவுகள் அடிப்படையில் கொள்கைகளை வகுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கும், மாநிலத்தின் சமூக பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், தமிழ்நாடு அரசு எப்போதும் தனது முழு ஆதரவை நல்கும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.

 

இச்சந்திப்பின்போது, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., ஜெ-பால் தொண்டு நிறுவன குளோபல் செயல் இயக்குநர் இக்பால் தாலிவால், ஜெ-பால் தெற்கு ஆசிய தொண்டு நிறுவன செயல் இயக்குநர் ஷோபினி முகர்ஜி, இயக்குநர் (திட்டம், பயிற்சி மற்றும் தொடர்பு) குணால் சர்மா ஆகியோர் உடனிருந்தனர். 

 

சார்ந்த செய்திகள்