Skip to main content

'வழுக்கி விழுந்த' கைதிகளிடம் மனித உரிமை பிரிவு டிஎஸ்பி விசாரணை!

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

காவல்நிலைய கழிவறைகளில் வழுக்கி விழுந்ததில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ள கைதிகளிடம் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி நேரில் விசாரணை நடத்தினார்.

கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது அவர்கள் காவல்துறையினரைக் கண்டு தப்பிக்க முயல்கின்றனர். அதுபோன்ற தருணங்களில் குற்றவாளிகள் பலர் தப்பிக்கும்போது இடறி விழ நேரிடுகிறது. இதனால் அவர்களின் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு விடுவதால், மாவுக்கட்டு போடப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

 

Human Rights Unit DSP investigation  to  'slippery' detainees


இன்னும்சில குற்றவாளிகள், காவல் நிலையங்களில் வைத்து விசாரிக்கும்போது அங்குள்ள கழிவறைகளில் வழுக்கி விழுகின்றனர். அதனாலும் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுகிறது.

குற்ற வழக்குகளில் சிக்கும் நபர்களுக்கு மட்டும் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்படுவது தற்செயலானதா? அல்லது காவல்துறையினரே திட்டமிட்டு எலும்புகளை உடைத்து விடுகின்றனரா என்பது குறித்து பரவலாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து மனித உரிமைகள் ஆணையத்திற்கும் தொடர்ந்து புகார்கள் சென்றன. இந்நிலையில், இதுபோன்ற புகார்களை விசாரிக்க 4 டிஎஸ்பிக்களை நியமித்து உத்தரவிட்டது மனித உரிமைகள் ஆணையம்.

இதையடுத்து சேலம் மத்திய சிறையில் மாவுக்கட்டுடன் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி சவுந்திரராஜன் கடந்த இரு நாள்களாக விசாரணை நடத்தினார். சிறைச்சாலைக்குள் மனித உரிமை மீறல்கள் இருக்கிறதா என்றும் தீவிர விசாரணை நடத்தினார். இதனால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்