Skip to main content

ஆந்திரா தேர்தல் களத்தில் பதற்றம்!

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
polling agents incidents Andhra Pradesh

நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) 4 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி ஆந்திரா - 25 தொகுதிகளுக்கும், தெலங்கானா - 17 தொகுதிகளுக்கும், பீகார் - 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் - 4 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசம் - 8 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா - 11 தொகுதிகளுக்கும், ஒடிசா - 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசம் - 13 தொகுதிகளுக்கும், மேற்குவங்கம் - 8 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீர் 1 தொகுதிக்கும் என 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 28 பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 ஆம் கட்டத் தேர்தலில் மொத்தம் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதே சமயம் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில தொகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

polling agents incidents Andhra Pradesh

இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களாக நியமிக்கப்பட்ட 3 பேர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புங்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமத்திலிருந்து 3 பேரும் கடத்தப்பட்டதாக தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைமை தேர்தல் அதிகாரி இது குறித்து மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் மீட்கப்பட்டு வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதே சமயம் ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டல கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு கட்சியினரும் ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் 2 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டன. காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் காரணமாக ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்