/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1749.jpg)
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் பங்கேற்காததால், அவர்களை வைத்து தமிழ்நாடு முழுக்க பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் அனைத்துப் பேருந்துகளும் இயங்க, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பில், உரிய பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள், நடத்துநர் உரிமம் பெற்றவர்கள், உரிய ஆவணங்களுடன் மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளை தற்காலிக ஊழியர்கள் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அசல் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வரவேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4520.jpg)
இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தை இன்று காலை 11 மணிக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு முற்றுகையிட இருப்பதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகச் சென்னை பல்லவன் இல்லத்தின் வெளியே நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்லவன் இல்லம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவர். போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் போராட்டம் நடத்தலாம் என்றும் அதேசமயம், பல்லவன் இல்லத்தை முற்றுகையிடும்போது அவர்கள் கைது செய்யப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப்போக்குவரத்துத் துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில், சென்னை எம்.டி.சி., எஸ்.இ.டி.சி, உள்ளிட்ட எட்டு போக்குவரத்துக் கழகம் மூலம் பணிக்கு வராதவர்களின் பட்டியல் சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)