Skip to main content

CMC மருத்துவக் கல்லூரியின் அதிர்ச்சி வைத்தியம்! மத்திய அரசு விழித்துக் கொள்ளுமா? கி. வீரமணி

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியின் அதிர்ச்சி வைத்தியம்! மத்திய அரசு விழித்துக் கொள்ளுமா? கி. வீரமணி

நீட் தேர்வு தங்களின் அடிப்படை நோக்கத்தையும், சேவையையும் தகர்ப்பதால் எங்கள் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையைப் புறக்கணிக் கிறோம் என்று வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி நிருவாகம் அறிவித்துள்ளதை எடுத்துக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர். கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நீட் என்னும் கொடுவாள் நாட்டை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. ஆதிக்கக் காரர்கள் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள். அடக்கப்பட்ட மக்களோ அக்னிப் பிழம்பாக  வீதிக்கு வந்து  பல வகைகளிலும் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர். தந்தை பெரியார் மண் என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவிக்க வேண்டியவர்களுக்குத் தெரிவித்து விட்டனர். புத்தி கொள் முதல் கொண்டால் நல்லது.

நூற்றாண்டு காணும் சி.எம்.சி.

நூற்றாண்டுக் காண இருக்கும் வேலூர் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி நிர்வாகம் ஒரு அதிரடியான முடிவினை மேற்கொண்டு அறிவித்திருப்பது -  அனைத்துத் தரப்பிலும் அலைகளை எழுப்பி யுள்ளது.

நீட் என்னும் தேர்வு நாங்கள் இதுவரை கட்டிக் காத்து வந்த, நடைமுறைப்படுத்தி வந்த சமூகநீதிக்கு எதிரானது என்பதால் எங்கள் மருத்துவக் கல்லூரி யில் ஆண்டுதோறும் சேர்க்கும் நூறு எம்.பி.பி.எஸ்.களுக்கான இடங்களையும், 60 உயர் சிறப்பு மருத்துவ இடங்களையும் பூர்த்தி செய்யப் போவ தில்லை என்று சி.எம்.சி. நிருவாகம் அறிவித்து விட்டது.

ஆண்டு ஒன்றுக்கு ரூ.3000 மட்டுமே கட்டணம்

வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் ஒரு மாண வனுக்கு ஒரு வருடக் கட்டணம் ரூபாய் 3000 மட்டுமே.
இந்த மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியேறும் டாக்டர்கள் பின் தங்கிய பகுதிகளில் இரண்டாண்டுக் கட்டாயம் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தம் உண்டு.
சிறுபான்மை தனியார் மருத்துவக் கல்லூரி களுக்கென்று சட்டப் பூர்வமான தனித்த உரிமைகள் உண்டு. இந்தக் கல்லூரியில் சேருவ தற்குத் தனியாக நுழைவுத் தேர்வும் நடத்தப் படுகிறது.
இந்த சூழலில் நீட் என்பது அந்நிறுவனத்தின் அடிப் படை நோக்கத்தையே தகர்க்கக் கூடியதாக இருப்பதால் இந்த முடிவினை எடுத்துள்ளார்கள்.

கிருத்துவர்களின் கல்வி, மருத்துவ சேவை

இந்தியாவில் கல்வி, மருத்துவ சேவை என்று சொல்லும் பொழுது கிருத்துவ நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உண்டு.
வேறு கண்ணோட்டத்தோடு மத்திய பிஜேபி அரசு இதனை அணுகாமல் கல்விக் கதவை சாத்து வது புத்திசாலித்தனமல்ல.

மருத்துவர்களின் பற்றாக் குறை

மருத்துவர்கள் இன்னும் அதிகம் தேவை என்ற நிலைதான் உள்ளது. இந்தியாவில்  18 லட்சம் மருத்துவர்கள் தேவை. ஆனால் 9 லட்சம் மருத்துவர்கள் மட்டுமே உள் ளனர். 500 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் - மருத்துவர் பற்றாக்குறை காரணமாக 1800 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலைதான் உள்ளது.

மக்கள் நல அரசு என்றால் இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாமா? எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையோ மனதிற் கொண்டு அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிக்கலாமா?
வேலூர் சி.எம்.சி. நிறுவனம் ஓர் அதிர்ச்சி வைத்தியத்தைத் தந்துள்ளது.

எல்லா வகையிலும் வெறுக்கப்படுகிற  - மறுக்கப்படுகிற - நிராகரிக்கப்படுகிற  -நீட்டை ஒட்டு மொத்தமாக  - நிரந்தரமாக நீக்கி ஒழிப்பதே இதற்கு ஒரே பரிகாரம்! 

சார்ந்த செய்திகள்