Skip to main content

மன்னார்குடி அதிமுக அலுவலகத்திற்கு தீ வைப்பு: புதிய மா.செ, ந.செ மீது புகார்!

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
மன்னார்குடி அதிமுக அலுவலகத்திற்கு தீ வைப்பு:
புதிய மா.செ, ந.செ மீது புகார்!



அதிமுக-வின் அதிகார மையமாக இருந்த மன்னார்குடியில் கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டை விழ தொடங்கியுள்ள நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரன் தயவில் கட்சி, ஆட்சி பதவிகளுக்கு வந்த பலரும் இப்போது அந்த குடும்பத்திற்கு எதிராகவே உள்ளனர்.
  
அப்படித்தான் அதிமுக மாவட்ட அலுவலகத்திற்கு மன்னார்குடி கீழ வீதியில் திவாகரன் ஒரு இடம் வாங்கி மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் ஆர்.காமராஜிடம் ஒப்படைத்து கட்சி நிர்வாகிகள் பெயரில் பத்திர பதிவு செய்ய சொன்னார். ஆனால் மீதி தொகை கொடுத்து பத்திரம் எழுதாததால் நில உரிமையாளர் நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலை உருவானது.
  
இந்த நிலையில் தான் அதிமுக-வில் சசிகலா அணி எடப்பாடி அணிகள் பிரிந்த நிலையில் அமைச்சர் காமராஜ் எடப்பாடி அணியில் இருப்பதால் தினகரன் புதிய மாவட்ட செயலாளராக எஸ்.காமராஜையும் நகர செயலாளராக வழக்கறிஞர் ஆனந்தராஜ் ஆகியோரை நியமனம் செய்த நிலையில் இரு தரப்புக்கும் பல நேரங்களில் சலசப்பு ஏற்பட்டது. நன்னிலத்தில் கட்சி அலுவலகத்தை தினகரன் தரப்பு கைப்பற்றியதால் மோதல் உருவாகி கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
 
அதே போல மன்னார்குடி கட்சி அலுவலகத்தை தினகரன், திவாகரன் தரப்பு கைப்பற்றிவிடும் என்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திவாகரன் தரப்பை சேர்ந்த மாஜி கவுன்சிலர் அலமேலுமங்கை பாரதி என்பவரின் வீட்டு வாசலில் இருந்த கொட்டகை தீ பற்றி எரிந்தது.
 
அதே போல இன்று அதிகாலை 2.30 மணிக்கு அதிமுக அலுவலக வாசலில் உள்ள பந்தல் தீ பற்றி எரிந்துள்ளது. அருகில் உள்ள இந்தியன் வங்கி கண்காணிப்பு கேமரா பதிவில் 2.21 மணி வரை பதிவுகள் உள்ளது ஒரு கருப்பு சட்டை போட்ட நபர் கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு வந்து முதலில் கேமராவில் ஒரு பனியனை வைத்து மறைத்துள்ளது வரை பதிவாகியுள்ளது.

அதன் பிறகு பதிவுகள் இல்லை. இந்த நிலையில் பந்தல் தீ பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து இன்று காலை காவல் நிலையத்திற்கு சென்ற வேட்டைத்திடல் சத்தியமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரில் (புதிய மாவட்ட செயலாளர்) எஸ். காமராஜ், (புதிய நகர செயலாளர்) வழக்கறிஞர் ஆனந்தராஜ் ஆகியோர் தூண்டுதலின் பேரில் மர்ம நபர்கள் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்துள்ளனர் என்று புகாரில் கூறியுள்ளார்.
 
இது குறித்து தினகரன் அணி நகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தராஜ், அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக பினாமி பெயர்களில் சொத்து சேர்த்துள்ளது பற்றிய ஆவணங்களை திரட்டி வருவதை அறிந்து அவர்களே தீ வைத்துக் கொண்டு எங்கள் மீது புகார் கொடுத்துள்ளார்கள். சட்டப்படி வழக்கை சந்திப்போம். தீ வைத்த உண்மையான நபர்களை கைது செய்ய வேண்டும் என்றார். இந்த சம்பவத்தால் மன்னார்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்