உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு கடந்த மாதம் 1ம் தேதி விசாரணைக்கு வந்தபோது. திமுக சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜரானார். அப்போது, அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி, உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான ஆலோசனைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்தார். மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.குமார், தேர்தலை நடத்த 50 நாட்கள் தேவை என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் வரும் திங்கட் கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.