ADVERTISEMENT

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி மனைவி கண்ணீருடன் மனு...

02:49 PM Aug 07, 2020 | rajavel

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே உள்ளது பெரியக்கோட்டிமுளை கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் 40 வயது பெரியசாமி. இவருக்கும் அம்சவல்லி என்பவருக்கும் கடந்த 15 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 15 வயதில் பிரேம்குமார், 13 வயதில் பிரதாப், 10 வயதில் அனுஷ்யா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

ADVERTISEMENT

குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு கட்டிட வேலை செய்வதற்காக பெரியசாமி சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு தினமும் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் செல்போனில் தொடர்பு கொண்டு அவ்வப்போது பேசி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவரது செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் பெரியசாமியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தவிப்பில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் அவருடன் வேலை செய்து வந்த பக்கத்து ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவர், பெரியசாமி மனைவி அம்சவல்லிக்கு போன் செய்து உங்கள் கணவர் தங்கியிருந்த அறையில் இறந்து போய் கிடந்துள்ளார். அவருடன் வேலை செய்த சக நண்பர்கள் அவரை வேலைக்கு அழைத்துச் செல்வதற்காக அவர் அறைக்கு சென்று எழுப்பியபோது அவர் உயிரிழந்த நிலையில், பிணமாக கிடந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது என்ற தகவலை கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அம்சவல்லி, அவரது குடும்பத்தினர் செய்வதறியாமல் நேற்று கம்மாபுரம் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டுள்ளனர். அங்குள்ள போலீசார் அவர்களை தாசில்தார் அல்லது விருத்தாசலம் சார் ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளிக்குமாறு ஆலோசனை கூறியுள்ளனர். இதையடுத்து அம்சவல்லி தனது மூன்று பிள்ளைகளுடன் விருத்தாசலம் தாசில்தார் பொறுப்பு செல்வமணியை சந்தித்து தனது கணவரை மீட்டு தருமாறும் தனது கணவர் இறப்பின் மர்மத்தை உரிய விசாரணை செய்து வெளிக்கொண்டுவர வேண்டும், அவரின் உடலை ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் செல்வமணி, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார். கணவர் இறந்த சூழ்நிலையில் தனது பிள்ளைகளோடு தனது கணவரின் மரணம் எப்படி ஏற்பட்டது, அவர் உடலை ஊருக்கு கொண்டுவர முடியுமா, இப்படி பல்வேறு குழப்பமான நிலையில் உள்ளனர் அம்சவல்லி அவரது பிள்ளைகளும். அந்தக் குடும்பம் பரிதவிப்பில் உள்ளது கண்டு கிராமத்து மக்களும் சோகத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT