கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 2014 திருமணம் நடந்துள்ளது. இதன்மூலம் மூன்று வயதில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த கைக்குழந்தையோடு கடலூர் மாவட்ட எஸ்பி அபிநவ் அவர்களிடம் சுகன்யா தன் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

Advertisment

tictok

இந்த புகார் குறித்து சுகன்யா கூறுகையில், "2014 எங்களுக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு என் கணவர் வீட்டில் மாமியார் நாத்தனார் ஆகியோர் என்னை கொடுமை படுத்தினார்கள். அதையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கை நடத்தினேன். இந்த நிலையில் எனது கணவர் ராஜசேகர் டிக்டாக் செயலி மூலம் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பேசியும், நடித்தும் அதை பதிவு செய்து செல்போன் மூலம் வெளியிட்டு வந்தார்.

tictok

Advertisment

இதன்மூலம் பல்வேறு பெண்களுடன் என் கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினை உருவானது. இவை பற்றி சமீபத்தில் கடம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் எங்களை அழைத்து விசாரணை செய்து என் கணவரை கண்டித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு என் கணவர் திடீரென்று காணாமல் போனார். கடந்த மூன்று மாதங்களாக அவர் வீட்டுக்கு வரவில்லை. விசாரித்தபோது புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் டிக்டாக் செயலி மூலம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் என்னையும் என் குழந்தையையும் தவிக்க விட்டுவிட்டு அந்த பெண்ணுடன் ஓடிவிட்டார்.

இதுதொடர்பாக அறந்தாங்கி காவல் நிலைய போலீசார் என்னை தொடர்புகொண்டு விசாரித்தனர். அப்போது என் கணவர் ஒரு இளம்பெண்ணுடன் இருக்கும் வீடியோவையும் போலீசார் எனக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள். அதன் மூலம் என் கணவர் டிக் டாக் மூலம் அந்தப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இப்போது நானும் என் குழந்தையும் நிர்க்கதியான நிலையில் உள்ளோம். எனவே மாவட்ட காவல்துறை அதிகாரி அவர்கள் என் கணவரை அந்த இளம்பெண்ணிடம் இருந்து மீட்டு என்னுடன் சேர்த்து வைக்குமாறு புகார் அளித்துள்ளேன்" என தெரிவித்தார். டிக் டாக் செயலி ஒரு குடும்பத்தையே சீரழிக்கும் நிலையை உருவாக்கி உள்ளது.