cuddalore district husband and wife incident mahila court judgement

Advertisment

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சிப்பேட்டையைச் சேர்ந்தவர் வேலு (வயது 35). இவரது மனைவி கோரணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜோதிலட்சுமி (வயது 27). இவர்கள் இருவரும் காதலித்து, வீட்டை விட்டு வெளியேறி ஆபத்தாரணபுரம் அம்மன் கோவிலில் (20/07/2016) அன்று திருமணம் செய்துக் கொண்டனர். பின்னர் ஜோதிலட்சுமி வேலுவின் தாய், தந்தையுடன் சேர்ந்துவசித்து வந்தார். சில மாதங்களில் கணவன் வீட்டார் ஜோதிலட்சுமியிடம் வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தி வந்தனர். இதனிடையே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்துள்ளது.

இந்த நிலையில் கணவர் வேலு, அவரது தந்தை கணேசன், தாயார் செல்வாம்பாள் ஆகியோர் ஜோதிலட்சுமியிடம் வரதட்சனைக் கேட்டு சித்திரவதைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த (29/09/2017) அன்று வீட்டில் யாரும் இல்லாதபோது ஜோதிலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து வேலு, அவரது தந்தை கணேசன், தாயார் செல்வாம்பாள் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisment

இது தொடர்பான வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று (23/01/2021) தீர்ப்பளித்தார். தீர்ப்பில் குற்றவாளி வேலுவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும், அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், அவரது தந்தை கணேசன், தாயார் செல்வாம்பாள் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.