Skip to main content

காவல் நிலையத்தின் அருகிலேயே பூட்டி கிடந்த வீட்டில் ஒரு லட்சம் நகை கொள்ளை

Published on 18/10/2020 | Edited on 18/10/2020
incidenti in cuddalore viruthachalam

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திட்டக்குடி நெடுஞ்சாலையில் உள்ளது ஆவினன்குடி. இங்கு காவல்நிலையம் ஒன்றும்உள்ளது. காவல் நிலையம் அருகில் நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது சின்ராசு என்பவரது வீடு. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு அதே ஊரில் உள்ள தனது மாமியார் வீட்டில் சென்று மனைவி பிள்ளைகளுடன் கடந்த இரண்டு மாதமாக தங்கியுள்ளார்.

அவ்வப்போது தனது வீட்டிற்கு வந்து பார்த்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சின்ராசு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க காயின்கள் டாலர் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இவைகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து சின்ராசு அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக திட்டக்குடி டி. எஸ்.பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டிற்கு நேரில் வந்து விசாரணை செய்தனர். கடலூரிலிருந்து தடய அறிவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது யாரையும் அடையாளம் காட்டவில்லை. காவல் நிலையம் அருகிலேயே நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

அதிமுக பிரமுகர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்; தாய், தந்தை, மகன் கைது!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 mother, father and son, were arrested robbery of AIADMK official  house

திருவண்ணாமலை குபேர மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் முருகன். முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற நகரப் பொருளாளராக இருந்தார். தன்னுடைய குடும்பத்தினருடன் திருமணத்திற்காக வெளியூர் சென்ற நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம் 28ம் தேதி திருவண்ணாமலைக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி ஆகியவற்றைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன், இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

அதிமுக பிரமுகர் முருகன் வீட்டில் கொள்ளையடித்ததாக தந்தை சிவா, தாய் அமுதா, இவர்களின் மகன் ரஞ்சித்குமார் மற்றும் ரஞ்சித்குமார் நண்பர் ஸ்ரீராம் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீசார் மார்ச் 5 ஆம் தேதி கைது செய்து கிராமிய காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

கொள்ளையடித்த நகைகளில் சுமார் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவியை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். குறிப்பாக ரஞ்சித்குமார் மற்றும் ஸ்ரீராம் இருவரும் இருசக்கர வாகனத் திருட்டில் கைதாகி சிறைக்குச் சென்று தற்போது வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பாக இவர்களுக்கு ரஞ்சித்குமாரின் தாய், தந்தையர் உதவியாக உள்ளனர் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஸ்ரீராம் என்பவரின் கைரேகை மற்றும் அவரின் சமூக வலைத்தள பக்கங்களைக் கொண்டு அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை வேலூர் சாலையில் உள்ள தீபம் நகரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.