Skip to main content

'எங்களுக்குப் பதில் சொல்லாமல் நகர முடியாது' - ஆட்சியரின் காருக்கு முன் படுத்த மக்களால் பரபரப்பு!

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

incident in viruthunagar

 

விருதுநகரில் ஆய்வுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை, பொதுமக்கள் சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

'புரெவி' புயல் காரணமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் விருதுநகரில் உள்ள அணை, கண்மாய்களைக் கண்காணித்து ஆய்வு செய்யச் சென்றனர். பெரியாறு, பிளவக்கல், கோவிலாறு அணைகளில் ஆய்வு செய்த நிலையில், இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆய்வு மேற்கொள்ளவதற்காகச் சென்றனர். அப்போது, புலாலன் தெருப் பகுதி மக்கள் திடீரென மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வந்த வாகனங்களுக்கு முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

பல ஆண்டுகளாக அந்தப் பகுதி மக்கள் செங்கல் சூளையில் வேலை செய்துவரும் நிலையில், கடந்த ஒரு வருடமாக மண் எடுக்க அதிகாரிகள் விடுவதில்லை. இதனால், எங்கள் வாழ்வாதாரமே முற்றிலும் பதிக்கப்பட்டுள்ளது என்றனர். போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அப்புறப்படுத்த முயன்ற நிலையில், ஆட்சியரின் வாகனத்தின் முன் படுத்த மக்கள், எங்களுக்குப் பதில் சொல்லி விட்டுத்தான் நகர வேண்டும் எனத் தரையில் படுத்தவாறே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கடந்த ஒரு மணிநேரத்திற்கு மேலாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. திடீரென மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். லேசாக மழை பொழிந்தபோதிலும் மக்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்வதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்