Skip to main content

100 ரூபாய்க்கு கோணிப்பையில் பூனைகள் திருட்டு; உணவு சர்ச்சையில் மீண்டும் சிக்கிய சென்னை

Published on 01/05/2024 | Edited on 01/05/2024
 Stealing of cats for 100 rupees; Chennai caught in food controversy again

சென்னையில் இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் பூனைகளை மூட்டையில் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக விலங்கு நல ஆர்வலர் ஒருவர் புகார் அளித்திருப்பதும் அதுதொடர்பாக அவர் கூறி இருக்கும் கருத்துக்களும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நாய் கறியில் பிரியாணி சமைக்கப்படுவதாக வதந்திகள் கிளம்பி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் மீண்டும் ஒரு பீதியைக் கிளப்பியுள்ளது இந்த சம்பவம்.

சென்னை கீழ்ப்பாக்கம் குளக்கரை சாலை பகுதியில் வசித்து வருபவர் ஜோஸ்வா. விலங்கு நல ஆர்வலரான இவர், இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் உணவின்றி தவித்து வரும் நாய், பூனை ஆகியவைகளுக்கு உணவளிப்பதை வாடிக்கையாக மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் நேற்று வழக்கம்போல சாலையோரம் இருந்த விலங்குகளுக்கு உணவிட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது சிறுவன் ஒருவனுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையில் திரிந்த பூனைகளை பிடித்து கோணிப்பையில் போட்டுக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு அதிர்ந்த ஜோஸ்வா அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். பின் தொடர்ந்து வருவதை தெரிந்துகொண்ட அந்த நபர் இருட்டில் அந்த கோணிப்பையை மறைத்து வைத்துவிட்டு எல்லா பூனையும் தப்பித்து ஓடி விட்டது எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரிக்கும்போதே அந்த இடத்திலிருந்து அந்த நபர் தப்பி ஓட முயன்ற நிலையில், ஜோஸ்வா அவரை பின் தொடர்ந்து சென்று ஓடிப் பிடித்துள்ளார். அந்த நபரை பிடித்து மீண்டும் விசாரித்த பொழுது ஒரு பூனையை 100 ரூபாய்க்கு விற்பதற்காக பிடித்துச் செல்வதாக சொன்ன தகவல் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

 Stealing of cats for 100 rupees; Chennai caught in food controversy again

இது தொடர்பாக புகார்ளித்த பிறகு செய்தியாளர் சந்தித்த விலங்கு நல ஆர்வலர் ஜோஸ்வா, ''பூனையைப் பிடித்துக் கொண்டு சென்று என்ன செய்வாய் என அந்த நபரிடம்  கேட்டால், 100 ரூபாய் கொடுங்கள் நான் பூனையை விட்டு விடுகிறேன். எங்களுக்கு இது தான் பொழப்பே என்று சொல்கிறார். இதில் ஒரு பெரிய கேங்கே இருப்பதாக தெரிகிறது. பூனையை ரோட்டுக் கடையில் விற்கிறார்களா அல்லது சென்னையில் உள்ள சாலையோர பிரியாணி கடைகளில் சிக்கன், மட்டன் பிரியாணிகள் மலிவு விலையில் விற்கப்படும் நிலையில் அந்த கடைகளுக்காக பூனைக்கறி பயன்படுத்த வாய்ப்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது'' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்