Skip to main content

ஆளுநர் வருகையால் தடுத்து நிறுத்தப்பட்ட பக்தர்கள்

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

Governor's visit temple Devotees stopped

 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது குடும்பத்துடன் இரண்டு நாள் பயணமாக கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நேற்று முன்தினம் விமானம் மூலம் தூத்துக்குடி சென்றடைந்தார். அப்போது, தமிழக ஆளுநரை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் வரவேற்றனர். குடும்பத்துடன் சென்ற ஆளுநர், தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி சென்றடைந்தார். ஆளுநர் வருகையால் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு அன்று மாலை ஆளுநர் தனது குடும்பத்தினருடன் தனிப் படகில் திருவள்ளுவர் சிலைக்குச் சென்று பார்வையிட்டு, அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

அதனைத் தொடர்ந்து, படகு மூலம் விவேகானந்தர் நினைவிடத்திற்குச் சென்று சிறிது நேரம் தியானம் செய்தார். அதன் பிறகு அவர், சன் செட் பாயிண்ட் இடத்திற்குச் சென்று சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால், அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளைக் காவல்துறையினர் அனுமதிக்காமல் பேரிகார்டுகளை வைத்து தடுத்தனர். மேலும், அந்தப் பகுதியில் இருந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால், அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சூரிய அஸ்தமனத்தைக் காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

 

இந்த நிலையில், நேற்று காலை 8 மணி அளவில் ஆளுநர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்காகத் திரிவேணி பகுதியில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய கோவிலுக்கு வந்திருந்தார். ஒரு மணி நேரம் கோவில் உள்பிரகாரங்களைச் சுற்றி வந்து, காலை 9 மணி அளவில் கோவிலை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். இதனால், 8 மணி முதல் 9 மணி வரை பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்