Skip to main content

‘காவிரிக் கரையில் இருந்தும் குடிநீருக்குப் போராடுகிறோம்’ - புலம்பும் மக்கள்

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
People living on banks of Trichy Cauvery dam are suffering without drinking water

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது வேங்கூர் ஊராட்சி. இப்பகுதி இரு ஆறுகளுக்கு இடையிலிருந்தாலும் இங்கு குடிநீர் பிரச்சனை அடிக்கடி ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, இந்த ஊராட்சியில் உள்ள விஎஸ் நகர், ஆர்விஎஸ் நகர், சீயோன்கார்டன், சத்யம்நகர், சாமிநாதபுரம், கலைஞர் காலனி, ஜெயம் கார்டன், பெரியார் காலனி, அசோக் நகர், முருக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகின்றது.

இப்பகுதிகளில் கடந்த 15 நாள்களாகவே சீரான குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தொடர்புடைய துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுத்து, குடிநீர் பிரச்சனை நிரந்தரமாக நீங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமக்கள் சிலர் இதுகுறித்து கூறுகையில், “காவிரி கரையிலிருந்தும் ஆண்டுதோறும் குடிநீருக்காக போராடும் நிலை உள்ளது. ஆனால் இங்கிருந்து ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு காவிரி நீர் கொண்டு செல்லப்படுகிறது. அதில் அரசியல் பிரமுகர்கள், ஆட்சியாளர்கள், அலுவலர்கள் காட்டும் ஆர்வத்தில் சில சதவிகித ஆர்வத்தை காட்டி திருச்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க முயற்சிக்கலாம்” என்றனர்.

இது தொடர்பாக கடந்த மே 2 ஆம் தேதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியும். இதுவரை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்கின்றனர்

சார்ந்த செய்திகள்