Skip to main content

அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு!

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!
பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு!

நீலாம்பூர் அரசு நடுநிலை பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துகுள்ளானது. பள்ளி தொடங்குவதற்கு முன் இந்த விபத்து நடந்ததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட நீலாம்பூரில் அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர். ஆறாம் வகுப்பறையை திறந்து பார்த்த போது, அதன் மேற்கூரை இடிந்து விழுந்து கிடந்தது.

இதனை பார்த்து அதிர்ந்த பெற்றோர்கள், பள்ளியின் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல், இந்த கட்டத்தில் கல்வி பயில்வதாகவும் சற்று தாமதமாக இந்த விபத்து நடந்திருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும் என அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். தற்காலிகமாக மாணவ-மாணவிகள் மரத்தடியில் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது. பள்ளி இடியும் நிலையில் இருப்பதாகவும், அதனை சீரமைத்து தரும்படி, கடந்த மாதம் 19 ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலருக்கு, அப்பள்ளி தலைமை ஆசிரியர் புகார் அனுப்பி இருந்தார்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொது மக்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு பிற்பகல் வந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பால முத்து, கட்டிடம் தரமற்ற நிலையில் இருப்பதை ஒத்துக்கொண்டார். 3 வகுப்பறைகளை தற்காலிகமாக மூடி வைக்கவும் உத்தரவிட்டார். கடந்த 2013-2014 ஆண்டு தான் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அந்த கட்டிடம் கட்டப்பட்டது. அதற்க்குள் இடிந்து விழுவதற்கு, தரமற்ற கட்டுமானமே காரணம் என குற்றம் சுமத்தினார்கள். எனவே ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

- அருள்குமார்

சார்ந்த செய்திகள்