
காவிரி உரிமை மீட்பு நடைப்பயணத்தில் தொட்டியம் திமுக ஒன்றியச் செயலாளர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, நேற்று மாலை திருச்சி முக்கொம்பிலிருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தைத் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருச்சி முக்கொம்பிலிருந்து தொடங்கிய நடைப்பயணத்தில் பங்கேற்ற தொட்டியம் திமுக ஒன்றியச் செயலாளர் சீமானூர் பிரபு (54). இவர் ஸ்டாலின் நடந்து செல்லும் போது கொடியை ஏந்தியபடி ஸ்டாலினுக்கு பின்னால் நடந்து சென்றுள்ளார். அப்போது சீமானூர் பிரபுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை உடனடியாக திருச்சி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, பிரபுவின் உடல் திருச்சி தொட்டியத்தை அடுத்துள்ள சீனிவாச நல்லூரில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
சீமானூர் பிரபு கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிற்று தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.