
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGA) எனப்படும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 91 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு வழங்கத் தமிழகத்திற்குத் தரவேண்டிய ரூ.4 ஆயிரத்து 34 கோடி நிதியை மத்திய அரசு வழங்காமல் தமிழ்நாட்டைத் தொடர்ச்சியாக வஞ்சித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து மத்திய பாஜக அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி (29.3.2025) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி ரூ. 2 ஆயிரத்து 999 கோடி விடுத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியில் நிலுவையில் இருந்த ரூ. 4 ஆயிரத்து 34 கோடியை விடுவிக்க வேண்டும் எனத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் ரூ.2 ஆயிரத்து 999 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.